தமிழக மக்களுக்கு முழுமையான மருத்துவ பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதையும், மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களின் பயன்கள் மாநிலத்திற்கு உரிய அளவில் சென்றடைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, மாநிலங்களவையில் எம்.பி. எல்.கே. சுதீஷ் முக்கிய கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட மத்திய நிதி, திட்டத்தின் மூலம் பயனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை, மருத்துவமனை அனுமதிகள் மற்றும் மாநில அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்துடன் இந்தத் திட்டம் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அவர் மாநிலங்களவையில் விளக்கம் கோரினார்.
இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், தமிழ்நாட்டில் 86.48 லட்சம் குடும்பங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 1.27 கோடி மருத்துவமனை அனுமதிகளுக்கு₹10,359.38 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த மூன்று நிதியாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் பங்காக ₹1,574.77 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த எம்.பி. எல்.கே. சுதீஷ், தமிழக மக்கள் முழுமையான மருத்துவ பாதுகாப்பைப் பெறுவதற்கும், அவர்களுக்கு உரிய மத்திய அரசின் ஆதரவு தொடர்ந்து கிடைப்பதற்கும் மாநிலங்களவையில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று உறுதியளித்தார்.
மக்களின் சுகாதார உரிமை மற்றும் மருத்துவ பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி, தமிழகத்திற்கு உரிய நிதி மற்றும் நலத்திட்டப் பயன்கள் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தனது முயற்சிகளை தொடர்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.