தமிழ் – மலையாளத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் ‘ஆலி’; புதிய படைப்பாளிகளின் உணர்வுபூர்வ திரைப்படம்!
முழுக்க முழுக்க புதிய படைப்பாளிகளின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஆலி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இளம் தலைமுறையின் புதிய சிந்தனையையும், சமூகப் பின்னணியுடன் கூடிய உணர்வுபூர்வமான கதையையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத் திரையுலகில் புதிய இயக்குநர்கள் மற்றும் புதுமுகங்களின் படைப்புகள் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் இடம்பெறும் படைப்பாக ‘ஆலி’ உருவாகியுள்ளது. தமிழ் – கேரள எல்லைப் பகுதிகளை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் மனித உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்ட கதை சொல்லலுடன் உருவாகியுள்ளது. குறிப்பாக, மதம் மற்றும் ஜாதி எல்லைகளைத் தாண்டி நடைபெறும் திருமணத்தை மையமாகக் கொண்ட திருப்பம், படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
இப்படத்தில் பிரஜின், டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ், டாக்டர் ரஜித் குமார், சௌரவ் ஷ்யாம், ஆத்யா பிரசாத் (சுருதி), மன்ஹர் பிரியதர்ஷன், ஜோபி, மன்சாட் லீலா, சுரேஷ் திருவல்லாஉள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமல்லாமல், படத்தின் பாடல் வரிகளையும் அவர் எழுதியுள்ளார். மன்ஹர் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம், குடும்பங்கள் ஒன்றாகக் கண்டு ரசிக்கக்கூடிய உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் குழுவில் ரினாஸ் நாசர் ஒளிப்பதிவாளராகவும், அபு ஜியாத் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இசையை ராமவர்மா தம்புரான், சுரேஷ், ரத்தீஷ் ராய், ஆர்.ஆர். பிரதர்ஸ், ஷ்ரத்தா பார்வதிஆகியோர் இணைந்து அமைத்துள்ளனர். மேலும், அரபி மற்றும் இந்திப் பாடல்களுக்கு ரத்தீஷ் ராய்இசையமைத்துள்ளார்.
பாடல்களை ஹுசைன், சம்பத், அரவிந்த் வேணுகோபால், ரித்து கிருஷ்ணா, சரிதா ராஜீவ் ஆகியோர் பாடியுள்ளனர். ஒலியமைப்பை என். ஷாபு செருவல்லூர், டி.ஐ. பணிகளை சஜய் சி.ஆர். கவனித்துள்ளனர். நடன அமைப்பை அதுல் ராதாகிருஷ்ணன் மற்றும் சுனிதா நோயல் ஹாய் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை அகிலேஷ் மற்றும் ஷிஜு அபாஸ்கர் கவனித்துள்ளனர். தயாரிப்புக் கட்டுப்பாட்டாளராக ஸ்ரீதர் பணியாற்றியுள்ளார்.
புதிய படைப்பாளிகளின் முயற்சியாக உருவாகியுள்ள ‘ஆலி’, உணர்வுகளும் சமூகப் பார்வையும் கலந்த திரைப்படமாக ரசிகர்களை சந்திக்க ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.



