வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வி.ஜே. சித்துவின் ‘டயங்கரம்’ படப்பிடிப்பு நிறைவு!

24

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் உலகில் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள வி.ஜே. சித்து கதாநாயகனாக நடித்து, இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களிடையே கவனம் பெற்ற வி.ஜே. சித்து, இந்தப் படத்தின் மூலம் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். இளைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை, நட்பு, உணர்வுகள் மற்றும் சுய அடையாளத்தை நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு பாணியில் சொல்லும் திரைப்படமாக ‘டயங்கரம்’ உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் வி.ஜே. சித்துவுடன் நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதாபாத்திரங்களும், கலகலப்பான திரைக்கதையும் படத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பை கவனித்துள்ள நிலையில், ஏ. கீர்த்தி வாசன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தொழில்நுட்பக் குழுவின் அனுபவமும், இளம் படைப்பாளிகளின் ஆற்றலும் இணைந்து திரைப்படத்திற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்கும் இந்த திரைப்படத்தின் இசையை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் வெளியிட உள்ளது.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பின்னணிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் டீசர், இசை மற்றும் திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. வி.ஜே. சித்துவின் முதல் இயக்குநர் முயற்சியாக உருவாகியுள்ள ‘டயங்கரம்’, இளைய தலைமுறை ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குறிப்பிடத்தக்க படைப்பாக உருவெடுத்து வருகிறது.