மதுரையில் தொடங்கும் மர்ம வேட்டை… ‘வதந்தி சீசன் 2’ பத்திரிகையாளர் சந்திப்பு!

9

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ள ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரை முன்னிட்டு, சென்னையில் பிரம்மாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புஷ்கர் – காயத்ரி தயாரித்துள்ள இந்த கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லரை ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர் சசிகுமார், யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி, இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் மற்றும் பிரைம் வீடியோ குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி, ‘வதந்தி’ முதல் சீசனின் வெற்றிக்குப் பிறகு, அதைவிட வலிமையான கதையுடன் இரண்டாவது சீசனை உருவாக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கமாக இருந்ததாக தெரிவித்தனர். இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், முதல் சீசனையே எழுதிக் கொண்டிருந்தபோதே இரண்டாவது சீசனுக்கான கதைக்களத்தை மனதில் வைத்திருந்ததாகவும், மதுரையின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் மனிதர்களை ஆழமாக ஆய்வு செய்து கதையை வடிவமைத்த விதம் தங்களை மிகவும் கவர்ந்ததாகவும் கூறினர்.

மேலும், SI மூஸா ராசா கதாபாத்திரத்திற்கு சசிகுமார் மட்டுமே சரியான தேர்வாக இருந்ததாகவும், அவரது இயல்பான நடிப்பே அந்த கதாபாத்திரத்திற்கு கூடுதல் நம்பகத்தன்மையை வழங்கியுள்ளதாகவும் பாராட்டினர். வதந்தி சீசன் 2 உருவான ஒவ்வொரு கட்டத்திலும் படக்குழுவினரின் அர்ப்பணிப்பு தங்களை ஆச்சரியப்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசுகையில், முதல் சீசனின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது சீசனுக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருந்ததால், அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்வதே மிகப்பெரிய சவாலாக இருந்ததாக கூறினார். இந்தக் கதையை உருவாக்குவதற்காக பல மாதங்கள் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி மக்களின் வாழ்க்கை முறையை நேரடியாக கவனித்து, அதன் பிறகே திரைக்கதையை இறுதி செய்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.

மேலும், தொடரின் உலகத்தை இயல்பாக உருவாக்க 43 நாட்கள் தொடர்ந்து மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், தயாரிப்பாளர்கள் மற்றும் முழு தொழில்நுட்பக் குழுவின் ஒத்துழைப்பே இந்த தொடரின் மிகப்பெரிய பலமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

SI மூஸா ராசா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமார், முதலில் தலைப்பைப் பார்த்தபோது தாம் ‘மணி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறேன் என்று நினைத்ததாக சுவாரஸ்யமாக கூறினார். ஆனால், மதுரை பின்னணியில் ஒரு சாதாரண காவல்துறை அதிகாரியாக மூஸா ராசா கதாபாத்திரத்தை இயக்குநர் விவரித்த விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்தார்.

இந்தக் கதாபாத்திரத்தை இயல்பாக வெளிப்படுத்த இயக்குநர் தொடர்ந்து வழிகாட்டியதாகவும், வழக்கமான போலீஸ் கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இது அமைந்ததாகவும் அவர் கூறினார். குற்றவாளியை கண்டுபிடிப்பதை விட, ஒரு நிரபராதியை காப்பாற்ற போராடும் காவல்துறை அதிகாரியின் பார்வையில் கதை நகர்வதே இந்த தொடரின் தனிச்சிறப்பு என்றும் குறிப்பிட்டார்.

நடிகர் விவேக் பிரசன்னா, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸின் எழுத்து திறனை பாராட்டியதுடன், அவரது திரைக்கதைகள் நடிகர்களுக்கு இயல்பாகவே சிறந்த நடிப்பை வெளிப்படுத்த உதவுவதாக கூறினார். தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரியின் பணிப்பாணி மற்றும் படப்பிடிப்பு சூழல் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

நடிகர் யஷ்வந்த், புதிய முகங்களுக்கு பெரிய வாய்ப்புகளை வழங்கும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, ஒரு பாடலையும் பாடியிருப்பது தனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார்.

நடிகை அபர்ணா தாஸ், ‘டாடா’ திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் வித்தியாசமான கதைக்காக காத்திருந்த நிலையில், ‘வதந்தி சீசன் 2’ வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளித்ததாக தெரிவித்தார். சசிகுமாருடன் இணைந்து நடித்தது தனது நீண்டநாள் விருப்பம் என்றும், இந்த தொடரில் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருந்ததாகவும் கூறினார்.

நடிகை அனகா மருதோரா, ஆரம்பத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தயக்கம் இருந்தாலும், இயக்குநர் அதை விளக்கிய விதம் தன்னை முழுமையாக நம்ப வைத்ததாக தெரிவித்தார். ‘கருடன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் சசிகுமாருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியளித்ததாகவும் கூறினார்.

இசையமைப்பாளர் சிமோன் கே. கிங், முதல் சீசனுக்கும் இரண்டாவது சீசனுக்கும் முற்றிலும் மாறுபட்ட இசை உலகத்தை உருவாக்கியிருப்பதாக தெரிவித்தார். இந்த முறை இரண்டு பாடல்களும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்றும், உணர்வுகளே இந்த தொடரின் இசையின் மையமாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.

குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் நீதிக்கான தேடலை மையமாகக் கொண்ட ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’, ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.