இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’ (Atrocity) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான பாடல் புரோமோ கவனம் ஈர்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள முழுப் பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில், இளன் வெங்கயோ வரிகளில், மதிச்சியம் பாலா, சிந்தூரி விஷால் மற்றும் வெங்கயோஆகியோரின் குரலில் உருவாகியுள்ள இந்தப் பாடல், இளமைத் துள்ளலும் காதலின் உற்சாகமும் கலந்த இசை அனுபவமாக அமைந்துள்ளது. துள்ளலான இசை, வண்ணமயமான காட்சியமைப்பு மற்றும் நாயகன்–நாயகியின் இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை பாடலின் முக்கிய சிறப்பம்சங்களாக அமைந்துள்ளன.
குறிப்பாக, நவீன கால திருமண வாழ்க்கையில் நடைபெறும் கலகலப்பான ‘அட்ராசிட்டி’ தருணங்களை நகைச்சுவை கலந்த அணுகுமுறையில் பாடல் காட்சிப்படுத்துவதால், இளைஞர்கள் மத்தியில் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல விரும்பாத மனைவியால், கணவரே மனைவியின் வீட்டிற்குச் சென்று வாழும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் உறவுகளின் உணர்வுகளை புதுமையான கோணத்தில் சொல்லவுள்ளது.
மேலும், ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காதல், குடும்பம் மற்றும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை இசையின் மூலம் அழகாக வெளிப்படுத்தும் வகையில் பாடல்களும் பின்னணி இசையும் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
முதல் சிங்கிள் ‘அட்ராசிட்டி’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். திருமண வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களையும், குடும்ப உறவுகளின் கலகலப்பான தருணங்களையும் சுவாரஸ்யமாகச் சொல்லவுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம், ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.