கோவையில் ரசிகர்களின் அமோக வரவேற்பு… ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இசை விழாவில் உணர்ச்சிவசப்பட்ட சூர்யா!

7

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கோவையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திருவிழா சூழலில் ரசிகர்களின் உற்சாகத்துடன் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரி, தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகை மமீதா பைஜூ, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ், தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் பேசிய பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ், தனது ஆரம்பகால திரைப்பயணத்தில் வாய்ப்பு வழங்கிய ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு நன்றி தெரிவித்தார். சூர்யாவின் ஆயுத எழுத்து திரைப்படத்தை பார்த்த பிறகே இயக்குநராக வேண்டும் என்ற கனவு உருவானதாகவும், இன்று அவருடைய படத்திற்கு பாடல் எழுதியிருப்பது பெருமை அளிப்பதாகவும் கூறினார். மேலும், இயக்குநர் வெங்கி அட்லூரி தன்னை முதன்முறையாக முழுமையான காதல் பாடல் எழுத வைத்ததாகவும், அந்த ‘பட்டாம்பூச்சி’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

நடிகை மமீதா பைஜூ, சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் தனது திரைப்பயணத்தின் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாக அமைந்ததாகக் கூறினார். படப்பிடிப்பு தளத்தில் அவரது ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் அணுகுமுறை தனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்ததாகவும், இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், சூரரைப் போற்று திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய இதயபூர்வமான திரைப்படமாக விஸ்வநாத் & சன்ஸ் உருவாகியிருப்பதாகவும், சூர்யா ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘தி ஒன்’ பாடல் ரசிகர்களை கொண்டாட வைக்கும் என்றும் தெரிவித்தார். மமீதா பைஜூவின் நடனமும், படத்தின் உணர்வுகளும் ரசிகர்களை கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷி, கோவையிலேயே படப்பிடிப்பை தொடங்கி, அதே நகரிலேயே முதல் விளம்பர நிகழ்ச்சியையும் நடத்துவதில் மகிழ்ச்சி இருப்பதாக கூறினார். சூர்யா இப்படத்தில் இளமையான தோற்றத்துடன் புதிய பரிமாணத்தில் தோன்றியிருப்பதாகவும், ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக படம் அமையும் என்றும் தெரிவித்தார். மேலும், முதல் பாதியில் இடம்பெறும் சூர்யா, மமீதா பைஜூ மற்றும் ராதிகா சரத்குமார் இணையும் நகைச்சுவைக் காட்சி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என கூறினார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி, சூர்யாவின் சொந்த மண்ணான கோவையில் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டும் என்பதே தங்களின் விருப்பமாக இருந்ததாக கூறினார். படத்தின் கதையை கேட்டவுடன் சூர்யா உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும், அவர் இந்த திரைப்படத்திற்கு புதிய அடையாளம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். உறவுகள், காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் உணர்வுகள் அனைத்தும் இணைந்த முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளதாகவும், படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் திரையரங்கை விட்டு வெளியே வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவில் பேசிய நடிகர் சூர்யா, கோவையில் ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தார். தனது பிறந்தநாளை கொண்டாடாவிட்டாலும், ரசிகர்கள் மேற்கொண்ட ரத்ததானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட சமூகப்பணிகளை தொடர்ந்து கவனித்து வருவதாக கூறி அவர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்தார்.

குடும்பத்துடன் செலவிடும் நேரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், டிஜிட்டல் உலகில் அதிக நேரம் செலவிடுவதை விட உறவுகளுடன் நினைவுகளை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். கருப்பு திரைப்படத்திற்கு கிடைத்த ஆதரவுக்கும், வெளியீட்டில் துணைநின்ற விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நிதியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தனது ரசிகர்களுக்காக மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினரும் இணைந்து ரசிக்கக்கூடிய முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும், ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், நாசர், யோகி பாபு, காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம், குடும்ப உறவுகள், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ஃபீல்-குட் ஃபேமிலி என்டர்டெய்னராக ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.