நடிகர் கிருஷ்ணாவின் 25வது படமான ‘மர்டர் இன் டவுன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லருக்கு தொடக்கம்!

7

நடிகர் கிருஷ்ணாவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் 25வது திரைப்படமான ‘மர்டர் இன் டவுன்’ (Murder in Town) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் பரபரப்பான புலனாய்வு கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், கிருஷ்ணாவை வித்தியாசமான தோற்றத்திலும் கதாபாத்திரத்திலும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

மனு மந்த்ரா கிரியேஷன்ஸ், ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் மற்றும் யாத்ரா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். புலனாய்வு க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் மர்மமான சூழலையும், விறுவிறுப்பான கதையையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

போஸ்டரில் நடிகர் கிருஷ்ணா, அதியமான் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தீவிரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். குற்றச் சம்பவ இடம், சிதறிக்கிடக்கும் ஆதாரங்கள், இரத்தக்கறை படிந்த கோப்புகள், காவல்துறை தொப்பி, கண்காணிப்பு சாதனங்கள் உள்ளிட்ட காட்சிகள் படத்தின் மர்மத் தன்மையை உணர்த்துகின்றன. ஒவ்வொரு காட்சியும் கதையின் பின்னணியில் இன்னும் பல ரகசியங்கள் மறைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த திரைப்படத்தில் பிந்து மாதவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், வைபவ் முருகேசன், ஆர். பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், கலைமாமணி சரவணன், பத்மஸ்ரீ ஐ.எம். விஜயன், கிரிஷ் தயாள், கஜராஜ், தர்ஷிகா, பேபி நைனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ரஞ்சன் இசையமைத்துள்ள நிலையில், டி. கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். கவின் ஆதித்யாபடத்தொகுப்பை கவனித்துள்ளதுடன், வெங்கட் பாலா கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். வினோத் சுந்தர்மற்றும் ஸ்வேதா ராகுல் ஆடை வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர். வசனங்களை ‘கோடங்கி’ வடிவேல்எழுதியுள்ளார்.

குற்றாலம் மற்றும் கேரளாவின் பல அழகிய இடங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விறுவிறுப்பான திரைக்கதை, சஸ்பென்ஸ் நிறைந்த காட்சியமைப்பு மற்றும் புலனாய்வு திரில்லருக்கே உரிய பரபரப்புடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.