சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… பிரம்மாண்ட சோஷியோ ஃபேண்டஸி உலகிற்கு அழைக்கும் புதிய முயற்சி!

7

‘ஷம்பாலா’ திரைப்படத்தின் மூலம் தனித்துவமான கற்பனை உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் யுகேந்தர் முனி, தற்போது தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியாக ‘கரிகாலா’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் இந்த பான் இந்தியா சோஷியோ ஃபேண்டஸி திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் வெளியான கான்செப்ட் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படத்தின் தலைப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

‘கரிகாலா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடர்ந்த மர்மக் காட்டில் கையில் வாளை உயர்த்தியபடி குதிரையில் சீறிப்பாயும் சந்தீப் கிஷனும், அவருக்கு அருகில் கர்ஜித்தபடி பாய்ந்து வரும் கம்பீரமான சிங்கமும் இடம்பெற்றுள்ளன. இந்திய நாட்டுப்புறக் கதைகள், சாகசம் மற்றும் கற்பனை உலகம் ஆகியவற்றை இணைக்கும் பிரம்மாண்டமான திரைப்பட அனுபவத்திற்கு இந்த போஸ்டர் முன்னோட்டம் அளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் ‘கரிகாலா’, தலைமுறைகள் ரசித்த சந்தமாமா கதைகளின் மாய உலகில் இருந்து உத்வேகம் பெற்று உருவாகியுள்ளது. மந்திர சக்திகள், மறக்கப்பட்ட ராஜ்ஜியங்கள், வீரர்கள், சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் புராண மரபுகள் நிறைந்த உலகத்தை, நவீன தொழில்நுட்ப உதவியுடன் திரையில் உயிர்ப்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்திற்காக சந்தீப் கிஷன் தனது திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய தோற்றம் மற்றும் உடல் மொழியுடன் சக்திவாய்ந்த போர்வீரராக மாறியுள்ளார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடை அலங்காரம் மற்றும் வித்தியாசமான கெட்டப்புடன் அவர் திரையில் தோன்றவிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இரண்டு அத்தியாயங்களாக உருவாகும் ‘கரிகாலா’ திரைப்படத்தின் முதல் பாகம் 2027 ஜூலை 2-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் 2027 அக்டோபர் 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘ஷம்பாலா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் யுகேந்தர் முனி இன்னும் பெரிய அளவில் இந்தப் படைப்பை உருவாக்கி வருகிறார். விரிவான உலகக் கட்டமைப்பு, அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ், பிரம்மாண்டமான தயாரிப்பு வடிவமைப்பு, விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘கரிகாலா’, இந்திய சினிமாவில் சோஷியோ ஃபேண்டஸி வகைக்கு புதிய அடையாளத்தை உருவாக்கும் படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

பிரம்மாண்டமான தலைப்பு அறிவிப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ள நிலையில், ‘கரிகாலா’ திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.