‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… பிளாக் ஹியூமர் – ஃபேண்டஸி கலந்த குடும்ப என்டர்டெய்னருக்கு வரவேற்பு!
உத்ரா புரொடக்ஷன்ஸ், டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. எழுதி, இயக்கி, தயாரித்துள்ள செ. ஹரி உத்ரா, பிளாக் ஹியூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்து இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்மப் பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டியும், சிறுவனும் நிற்கும் காட்சி கவனம் ஈர்க்கிறது. அவர்களைச் சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம், பதற்றம் கலந்த முகபாவனைகளுடன் அந்தப் பெட்டியை நோக்கி நிற்பது, கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது. பழமையான வீட்டின் பின்னணி, சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட காட்சிகள், திரில் மற்றும் நகைச்சுவை கலந்த வித்தியாசமான குடும்பக் கதைக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. சமூக வலைதளங்களிலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் கவனம் பெற்று வருகிறது.
தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ விரும்பும் ஒரு நடுத்தர குடும்பம், அதனால் உருவாகும் பிரச்சினைகளில் இருந்து ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் எப்படி மீண்டு வருகிறது என்பதையே இப்படம் மையமாகக் கொண்டுள்ளது. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற பிளாக் ஹியூமர் பாணியில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘மாஸ்டர் பிளான்’ உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் புகழ் அக்ஷரா ரெட்டி நாயகன்–நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் பாவல் நவகீதன், திவ்யா ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
