புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’!

7

நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், நயன்தாரா மற்றும் கவினுடன் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ராஜேஷ் சுக்லா மேற்கொண்டுள்ள நிலையில், ஜென் மார்ட்டின்இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளனர்.

ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ்.எஸ். லலித்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி.ஜே.மற்றும் கே.எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொட்யூசராகவும் பணியாற்றியுள்ளனர்.

ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பு போஸ்டர் மூலம், ‘ஹாய்’ திரைப்படம் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு உறுதி செய்துள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் கூறுகையில், “பெயருக்கு ஏற்றபடி எளிமையான, இனிமையான, மனதை வருடும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘ஹாய்’ உருவாகியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய நகரங்களை பின்னணியாகக் கொண்டு நகரும் இந்தக் கதையை, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம். ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ போன்ற வில்லன்கள் இல்லாத குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களின் உணர்வை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்கும் படமாக இது இருக்கும்” என்றார்.

பாடலாசிரியராக ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பணியாற்றிய விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் என்பதாலும், நயன்தாரா – கவின் முதன்முறையாக இணைந்திருப்பதாலும், அனுபவம் மிக்க நட்சத்திரக் குழு ஒன்றாக பணியாற்றியிருப்பதாலும், ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகவுள்ள இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம், ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.