“கனவு மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் நிறைவேறும்” – ‘மகுடம்’ விழாவில் நடிகரும் இயக்குநருமான விஷால் நெகிழ்ச்சி!
நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் ‘மகுடம்’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில், தனது 35 ஆண்டுகால இயக்குநர் கனவு, தனது திரைப்பயணத்தில் பெற்ற ஆதரவு மற்றும் படக்குழுவினரின் பங்களிப்பு குறித்து விஷால் உணர்வுபூர்வமாகப் பேசினார்.
நிகழ்வில் பேசிய விஷால், ‘மகுடம்’ திரைப்படத்தை உருவாக்குவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரிக்கு முதலில் நன்றி தெரிவித்தார். மேலும், 14 மாதங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த காலகட்டத்திலும் தனக்கு உறுதுணையாக இருந்து, இந்த நொடிவரை தன்னுடன் பயணித்து வரும் தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவுக்கும் நன்றி தெரிவித்தார்.
“14 மாதங்கள் படம் நடிக்காமல் மிகுந்த சிரமத்தில் இருந்தபோதும் எனக்கு உறுதுணையாக இருந்து இந்த நொடிவரை என்னுடன் நின்றிருக்கிறார் என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா. வேறு யாராக இருந்தாலும் என்னை விட்டுப் போயிருப்பார்கள். திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணன் எனக்கு கொடுத்த ஊக்கமும், என் மீது வைத்த நம்பிக்கையும் வீண்போகக் கூடாது என்பதற்காக இந்தப் படத்திற்காக அதிகமாக உழைத்தேன்,” என்றார்.
தனது படக்குழுவினரின் ஈகோ இல்லாத அணுகுமுறையே ‘மகுடம்’ சிறப்பாக உருவாக முக்கிய காரணம் என்றும் விஷால் குறிப்பிட்டார். கேமராவுக்கு முன்னாலும் பின்னாலும் அதிகமான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதாகவும், நடிகர்களின் நடிப்பு, இசை, சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் தனது கருத்துகளைப் பகிர்ந்தபோதும், படக்குழுவினர் அதை எந்தவித ஈகோவும் இல்லாமல் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
நடிகர்கள் துஷாரா, அஞ்சலி, ஜான் விஜய், மாயா, அஸ்வின் உள்ளிட்ட அனைவரும் தனது ஆலோசனைகளை ஏற்று பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்த விஷால், நடிகர்களிடம் இருந்து சிறப்பான நடிப்பை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை இயக்குநர் பாலாவிடம் தான் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
“இயக்குநராக வேண்டும் என்பது எனது 35 வருட கனவு” என்று குறிப்பிட்ட விஷால், தனது இயக்குநர் கனவுக்கு தனது தந்தை அளித்த ஆதரவை நினைவுகூர்ந்தார். நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக சேருவதற்காக தனது தந்தை நான்கு மணி நேரம் காத்திருந்த சம்பவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
“என்னை ஊக்கப்படுத்தி இன்று என் கனவை நிறைவேற்றி வைத்த என் அப்பாவுக்கு நன்றி. அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ராம்கோபால் வர்மாவின் ‘உதயம்’ படத்தைப் பார்த்தபோது நான் இயக்குநராக வேண்டும் என்று நினைத்தேன். இன்று அந்தக் கனவு நனவாகியிருக்கிறது. நம் கனவுகளில் நாம் நம்பிக்கையுடன் இருந்தால், அது நிச்சயமாக நிறைவேறும். இது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தும்,” என்றார்.
தனது திரைப்பயணத்தில் தனது பெற்றோரின் பங்களிப்பையும் விஷால் நினைவுகூர்ந்தார். குறிப்பாக ‘சண்டக்கோழி’திரைப்படம் உருவாக தனது தாயார் முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறிய அவர், தனது தந்தை மற்றும் தாய் இருவருமே தனது கரியரில் மிக முக்கியமானவர்கள் என்று தெரிவித்தார்.
மேலும், ‘மகுடம்’ திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸின் 99வது படம் என்றும், ஆர்.பி. சௌத்ரி அறிமுகப்படுத்திய 45வது புதுமுக இயக்குநர் தான் என்றும் விஷால் குறிப்பிட்டார். தனது குருநாதரான ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நன்றி தெரிவித்த அவர், நடிப்பிலும் இயக்கத்திலும் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்டுடன் நீண்ட காலமாகப் பழக்கம் இருப்பதாகவும், தனது ரசனையை அவர் நன்றாகப் புரிந்துகொண்டு பணியாற்றியதாகவும் விஷால் தெரிவித்தார். நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி.யிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும், பொன். பார்த்திபன் தனக்கு நன்றாகப் பொருந்தக்கூடிய வசனங்களை எழுதியிருப்பதாகவும் அவர் பாராட்டினார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் குறித்து பேசிய விஷால், புதுமுக இயக்குநர்களுக்கு அவர் ஒரு வரம் என்று குறிப்பிட்டார். ‘மகுடம்’ திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் உயிர் கொடுத்திருப்பதாகவும், அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பாடலாசிரியர்கள் உமாதேவி, ஏகாதசி, விவேக், கருணா உள்ளிட்டோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
‘மகுடம்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் குறித்து பேசிய விஷால், “இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வேறு எந்தப் படத்திலும் வந்ததில்லை. படத்தின் கடைசி எட்டு நிமிடங்கள் மேஜிக் செய்யும்,” என்று குறிப்பிட்டு, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தார்.
நடிகர் ஜான் விஜய்யுடனான தனது நீண்டகால அறிமுகத்தையும் விஷால் நினைவுகூர்ந்தார். லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் போதே ஜான் விஜய்யை நன்றாகத் தெரியும் என்றும், அவரது இயல்பான மேனரிசத்தை ‘மகுடம்’ திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இசைஞானி இளையராஜாவின் இசையையும் படத்தில் பயன்படுத்தியிருப்பதாகக் கூறி அவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் தற்போது முதலமைச்சராக இருப்பதாகக் குறிப்பிட்ட விஷால், தான் அவரது படங்களை ரசித்த அதே ரோஹிணி திரையரங்கில் ‘மகுடம்’ திரைப்படத்தையும் பார்க்கப் போவதாக தெரிவித்தார்.
திரைப்படம் வெளியாக இன்னும் சில சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட விஷால், அவற்றைத் தாண்டி படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ‘மகுடம்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்த அவர், ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெறும் வெற்றிவிழாவில் மேலும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் கூறினார்.
“படத்தை தியேட்டரில் பாருங்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்,” என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்து தனது உரையை விஷால் நிறைவு செய்தார்.