இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது பன்முக நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் முரளி ஷர்மா, ஜெயசூர்யா நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்தியன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்துள்ளார். முரளி ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இப்படத்தில் நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜாபி ஜார்ஜ் தாடதில் தயாரிக்கும் இப்படத்தில், ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ரதீஷ் வேகா கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குவதுடன், இசை மற்றும் பின்னணி இசையையும் அவரே கவனிக்கிறார்.
பல மொழிகளில் தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் முரளி ஷர்மா, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் முதல் ஆக்ஷன் கதாபாத்திரங்கள் வரை தனது தனித்துவமான நடிப்பால் திரையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் நட்சத்திரப் பட்டியலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இப்படத்தில் ஜெயசூர்யாவுடன் ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, ஆன்சன் பால், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, வினய் ராய், சித்திக், சாய் குமார், சிராஜுதீன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேசிய உளவுத்துறை நடவடிக்கைகளை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் ‘ஆபரேஷன் டிரால்’, ஆக்ஷன் மற்றும் இன்வெஸ்டிகேஷன் அம்சங்களுடன் உருவாகும் த்ரில்லர் திரைப்படமாகும். ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலைத் தழுவி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை நடவடிக்கைகள், ஆக்ஷன் மற்றும் தேசப்பற்று ஆகிய அம்சங்கள் படத்தின் முக்கியப் பகுதிகளாக இடம்பெறுகின்றன.
படத்தின் படப்பிடிப்பு கேரளா, கோயம்புத்தூர், புதுடெல்லி, குலு, மணாலி, முசோரி மற்றும் லடாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. பல்வேறு நிலப்பரப்புகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் சுனிமோல் ஜாபி இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். ஒளிப்பதிவை நஜோஸ் மேற்கொள்ள, படத்தொகுப்புப் பணிகளை ஷஃபீக் வி.பி. கவனிக்கிறார். திட்ட வடிவமைப்பை நோபிள் ஜேக்கப் மேற்கொண்டுள்ளார்.
தயாரிப்பு வடிவமைப்பை சஜீஷ் தாமரச்சேரியும், கலை இயக்கத்தை சுனீஷ் சோதரனும் கவனிக்கின்றனர். ஆடை வடிவமைப்பை சமீரா சனீஷ் மற்றும் சரிதா ஜெயசூர்யா மேற்கொள்கின்றனர். நடிகர்களின் ஒப்பனைப் பணிகளை ரோனெக்ஸ் சேவியர் கவனிக்கிறார்.
‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும் வகையில் தயாராகி வருகிறது. முரளி ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, அவரது சிறப்பான நடிப்பை நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.