தபுவின் மிரட்டலான ‘கௌரி ஹெக்டே’… ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியீடு!

15

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் முதன்முறையாக இணைந்துள்ள பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா திரைப்படமான ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தபுவின் கேரக்டர் கிளிம்ப்ஸ்தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், உணர்வுகள், அதிரடியான சண்டைக் காட்சிகள் மற்றும் மர்மம் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டைட்டில் லுக், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள தபுவின் கதாபாத்திர முன்னோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

படத்தில் கௌரி ஹெக்டே என்ற சக்திவாய்ந்த அதிகாரி கதாபாத்திரத்தில் தபு நடிக்கிறார். நகரின் சேரிப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு தொடங்கும் இந்த கிளிம்ப்ஸ், படத்தின் இருண்ட மற்றும் யதார்த்தமான உலகத்தை முதலில் அறிமுகப்படுத்துகிறது. தொடர்ந்து காரில் வரும் தபு, சிகரெட்டைப் பற்ற வைத்தபடி சூழலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் காட்சிகள் இடம்பெறுகின்றன.

உள்ளூர் ரவுடி ஒருவருக்கு அவர் விடுக்கும் கடுமையான எச்சரிக்கையும், அதைத் தொடர்ந்து அவர் கொடுக்கும் அறையும், கௌரி ஹெக்டே கதாபாத்திரத்தின் கம்பீரத்தையும் அதிகாரத்தையும் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன. காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சூழ்ந்திருந்தாலும், எந்தவித தயக்கமும் இல்லாமல் எதிர்ப்பவர்களை எதிர்கொள்ளும் தபுவின் கதாபாத்திரம், படத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

‘One Fearless Woman’, ‘Powerful Officer’, ‘Ruthless’, ‘Merciless’, ‘Devil in the Department’ போன்ற வார்த்தைகள் கிளிம்ப்ஸ் முழுவதும் இடம்பெறுவது கௌரி ஹெக்டே கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்துகிறது. இறுதியில், “கௌரி ஹெக்டே, துணை ஆணையர், வருமான வரித்துறை” என தபு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சி, கிளிம்ப்ஸின் முக்கிய ஹைலைட்டாக அமைந்துள்ளது. அதேபோல், விஜய் சேதுபதியின் சில காட்சிகளும் இந்த முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

கம்பீரமான தோற்றம் மற்றும் அழுத்தமான உடல்மொழியுடன் தபு, கௌரி ஹெக்டே கதாபாத்திரத்தை தனது திரை ஆளுமையால் வலுப்படுத்தியுள்ளார். அதிகாரம், அச்சமின்மை மற்றும் ஆக்ரோஷம் ஆகியவற்றை ஒரே கதாபாத்திரத்தில் இணைக்கும் வகையில் இந்தப் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பது கிளிம்ப்ஸ் மூலம் தெரிகிறது. பூரி ஜெகன்நாத்தின் படங்களில் கதாபாத்திரங்களை வலுவாக அறிமுகப்படுத்தும் பாணிக்கு மற்றொரு உதாரணமாகவும் கௌரி ஹெக்டே கதாபாத்திரம் அமைந்துள்ளது.

இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, துனியா விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரம்ஹாஜி மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். சாம் கே. நாயுடு ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். சந்தோஷ் நூஜில்லாபடத்தொகுப்பையும், அனில் பாடூரி விஎஃப்எக்ஸ் பணிகளையும் கவனிக்கின்றனர்.

படத்தை பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் மற்றும் ஜே.பி. நாராயண ராவ் கொண்ட்ரோல்லா ஆகியோர் தயாரிக்கின்றனர். பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை உருவாக்குகின்றன.

டைட்டில் லுக், ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் தற்போது வெளியாகியுள்ள தபுவின் கேரக்டர் கிளிம்ப்ஸ் என ஒவ்வொரு அப்டேட்டிலும் புதிய தகவல்களை வெளியிட்டு வரும் படக்குழு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார், பிரம்ஹாஜி மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக தயாராகி வருகிறது.