ஃபஹத் பாசில் – அர்கா மீடியா ஒர்க்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘Don’t Trouble the Trouble’… ‘கேக்கு வாக்கு’ பாடல் வெளியீடு!

6

பன்முகத் திறமை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில், ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட வெற்றிப் படங்களை தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் இணையும் புதிய திரைப்படம் ‘Don’t Trouble the Trouble’. அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்கும் இப்படத்தில் ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார்.

‘பாகுபலி’ திரைப்படத் தொடரை தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஷோயிங் பிசினஸ் பேனரின் கீழ் தனது முதல் விநியோக முயற்சியாக ‘பிரேமலு’ திரைப்படத்தை வழங்கி வெற்றியைப் பெற்ற எஸ்.எஸ். கார்த்திகேயா, தற்போது இந்தப் புதிய படைப்பை தயாரித்து வருகிறார். தயாரிப்பாளர்கள் ஷோபு யர்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோரும் எஸ்.எஸ். கார்த்திகேயாவுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

ஃபேண்டஸி அம்சங்களுடன் உருவாகி வரும் ‘Don’t Trouble the Trouble’ திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது படத்தின் ‘கேக்கு வாக்கு’ (Cakeu Walku)என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

கால பைரவா இசையமைத்துள்ள இந்தப் பாடல், படத்தின் கதாநாயகன் சூரி கதாபாத்திரத்தின் வித்தியாசமான குணநலன்களையும், அவரது துள்ளலான அணுகுமுறையையும் அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கூலான இசையுடன் பயணிக்கும் பாடல், பின்னர் கால பைரவாவின் துள்ளலான இசையுடன் உற்சாகமான அனுபவமாக மாறுகிறது.

கால பைரவா மற்றும் வாசி இணைந்து பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளனர். எந்தவொரு சவாலான பணியையும் எளிதாக செய்து முடிக்கும் சூரியின் துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. கால பைரவா மற்றும் வாசி இணைந்து பாடலையும் பாடியுள்ளனர்.

பாடல் வீடியோவில் கால பைரவா, ஃபஹத் பாசில் மற்றும் சாரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கால பைரவாவின் துள்ளலான இசை மற்றும் நடன அசைவுகளுடன் தொடங்கும் வீடியோவில், ஃபஹத் பாசிலின் எனர்ஜியும் வித்தியாசமான ஸ்டைலும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. அவரது நடன அசைவுகள், புன்னகை மற்றும் திரை வசீகரம் பாடலுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன. சாராவும் இந்த வேடிக்கையான இசை வீடியோவில் இணைந்துள்ளார்.

ஃபஹத் பாசிலின் கதாபாத்திர தோற்றமும் அவரது உடல்மொழியும், ‘ஆவேசம்’ படத்தில் அவர் ஏற்று நடித்த ரங்கா கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு நினைவூட்டும் வகையில் இருப்பதாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

‘Don’t Trouble the Trouble’ திரைப்படம் வித்தியாசமான ஃபேண்டஸி என்டர்டெய்னராக உருவாகி வருவதால், டீசரைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ‘கேக்கு வாக்கு’ பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் இசை ஆல்பத்தின் தொடக்கமே ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் அப்டேட்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்கத்தில், ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் ‘Don’t Trouble the Trouble’ திரைப்படம், வித்தியாசமான ஃபேண்டஸி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி, 2026 செப்டம்பர் 11ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.