நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஐ அம் கேம்’ (I’m Game) திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘அருகே அருகே’ (Arugey Arugey)எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
தமிழ் பதிப்பிற்கான பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பிரபல பின்னணி பாடகர் அர்மான் மாலிக்பாடியுள்ளார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ‘அருகே அருகே’ பாடல் வெளியாகியுள்ளது.
மலையாளப் பதிப்பிற்கு ஷார்பு பாடல் வரிகளை எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். தெலுங்கு பதிப்பின் பாடல் வரிகளை சனாரே எழுத, அர்மான் மாலிக் குரல் கொடுத்துள்ளார். இந்தி பதிப்பிற்கு நுமன் கோகர் வரிகளை எழுதியுள்ளார். கன்னடப் பதிப்பின் பாடல் வரிகளை ஹிருதயா சிவா எழுத, பாடகர் அனிருத் சுஸ்வரம் பாடியுள்ளார்.
‘அருகே அருகே…’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் வெளியான உடனேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இனிமையான இசையும், மனதை வருடும் மெலடியும் கொண்ட இந்தப் பாடல், ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.
முன்னதாக வெளியான இப்படத்தின் டிரெய்லரும் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியான டிரெய்லர், பிரம்மாண்டமான காட்சிகள், அதிரடியான சண்டைக் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான சேசிங் காட்சிகள் மூலம் படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தியது.
டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மூலம், தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையில் ஒரு ஸ்டைலான ஃபேண்டஸி திரில்லர் அனுபவத்தை ‘ஐ அம் கேம்’ வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துல்கர் சல்மான் மிகவும் ஸ்டைலான மற்றும் மாஸான தோற்றத்தில் தோன்றுவது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படம், மலையாளத் திரையுலகின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஸ்டைலான போஸ்டர்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாக உருவாகும் இந்தப் பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார். வேஃபரர் ஃபிலிம்ஸ் சார்பில் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ்இணைந்து தயாரித்துள்ளனர். திரைக்கதையை சஜீல் பாபா, இஸ்மாயில் அபுபக்கர் மற்றும் பிலால் மொய்துஇணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீல் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, ஜிம்ஷி காலீத் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சண்டைக் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘லோகா’ திரைப்படத்தைத் தொடர்ந்து வேஃபரர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படமாக ‘ஐ அம் கேம்’ உருவாகிறது. அதேபோல், பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘RDX’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது.
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘ஐ அம் கேம்’, ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் முக்கியமான திரைப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.