26/11 தாக்குதலின் பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதை… ஆகஸ்ட் 14ல் ZEE5-ல் வெளியாகும் ‘பாரத் பாக்ய விதாதா’

9

இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு, 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது அசாதாரண தைரியத்துடன் செயல்பட்ட பெயரிடப்படாத நாயகர்களின் வீரத்தை மையமாகக் கொண்ட ‘பாரத் பாக்ய விதாதா’ திரைப்படத்தை இந்தி ZEE5 தளத்தில் பிரத்யேகமாக வெளியிடுகிறது. மனோஜ் தபாடியா எழுதி இயக்கியுள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 14, 2026 அன்று டிஜிட்டல் பிரீமியர் ஆகிறது.

கங்கனா ரணாவத், கிரிஜா ஓக், ஸ்மிதா தாம்பே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பாரத் பாக்ய விதாதா’, 26/11 தாக்குதல்களின் போது மும்பையின் காமா மற்றும் ஆல்ப்லெஸ் மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களின் துணிச்சலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

தாக்குதலாளர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தபோது, தங்களது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட சாதாரண மனிதர்களின் அசாதாரணமான செயல்களை இப்படம் பதிவு செய்கிறது. பயம், பதற்றம் மற்றும் ஆபத்து சூழ்ந்த அந்த தருணங்களில், கடமை உணர்வு மற்றும் மனிதநேயத்தை முன்னிறுத்திய அவர்களின் செயல்கள் படத்தின் மையமாக அமைந்துள்ளன.

வழக்கமாக 26/11 தாக்குதல்களை பாதுகாப்புப் படையினரின் வீரத்தின் கோணத்தில் அணுகும் கதைகளிலிருந்து மாறுபட்டு, மருத்துவமனைக்குள் இருந்த பெயரிடப்படாத நாயகர்களின் பார்வையில் இந்தச் சம்பவத்தை அணுகுகிறது ‘பாரத் பாக்ய விதாதா’. இதன் மூலம் தியாகம், மனவலிமை, கருணை மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றை முன்னிறுத்தும் உணர்வுப்பூர்வமான கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

நடிகையும் தயாரிப்பாளருமான கங்கனா ரணாவத், இந்தப் படத்தின் மூலம் 26/11 தாக்குதலின்போது பயங்கரவாதத்திற்கும் மனிதநேயத்திற்கும் இடையில் அச்சமின்றி நின்ற சுகாதாரப் பணியாளர்களின் சொல்லப்படாத கதைகளை வெளிக்கொண்டு வருவது முக்கியமானதாக இருந்ததாக தெரிவித்துள்ளார். நெருக்கடியான தருணங்களில் அசாதாரணமான தைரியத்தை வெளிப்படுத்திய சாதாரண குடிமக்களும் நாட்டின் உண்மையான நாயகர்களே என்பதை இப்படம் நினைவூட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் மனோஜ் தபாடியா, 26/11 சம்பவத்தை இதுவரை அதிகம் பேசப்படாத கோணத்தில் சொல்ல வேண்டும் என்பதே படத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார். காமா மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் எதிர்கொண்ட ஆபத்துகளையும், அதற்கு மத்தியில் அவர்கள் வெளிப்படுத்திய மனவலிமையையும் படமாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தப் படத்தை PEN Studios, Manikarnika Films மற்றும் Paramhans Creations நிறுவனங்கள், Eunoia Films LLPமற்றும் Floating Rocks Entertainment Pvt Ltd நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளன.

‘பாரத் பாக்ய விதாதா’ ஒரு த்ரில்லர்-டிராமா திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த சுதந்திர தினத்தில், நாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு துயர சம்பவத்தின் மற்றொரு பக்கத்தையும், அந்த இருண்ட நேரத்தில் மனிதநேயத்தையும் தைரியத்தையும் காப்பாற்றிய பெயரிடப்படாத நாயகர்களையும் நினைவுகூரும் படைப்பாக இப்படம் அமைய உள்ளது.

‘பாரத் பாக்ய விதாதா’ ஆகஸ்ட் 14, 2026 அன்று இந்தி ZEE5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.