தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள முனீஸ்காந்த், கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘தி டோர்ம் – The Dorm’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி டோர்ம் – The Dorm’ திரைப்படத்தில் முனீஸ்காந்துடன் சமூக வலைதளங்களில் பிரபலமான சபரீஷ், அருண் கார்த்தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்தங்கம், வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து மற்றும் ஃபெரோஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இளம் தலைமுறையினரின் சமூக வலைதளப் பயன்பாடு மற்றும் அவர்களைச் சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்திய கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முனீஸ்காந்தின் வித்தியாசமான தோற்றமும், அவருடன் இடம்பெறும் கதாபாத்திரங்களின் கலகலப்பான தருணங்களும் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ளன.
‘தி டோர்ம் – The Dorm’ திரைப்படத்திற்கு இளையராஜா முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷாம் விஷால் மற்றும் செபாஸ்டியன் ரொஸாரியோ இணைந்து இசையமைத்துள்ளனர். கு. கார்த்திக் வசனம் எழுத, படத்தொகுப்பு பணிகளை அனில் கிரிஷ் கவனித்துள்ளார். அமர் கீர்த்தி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகியுள்ள இப்படத்தை குட் ஸ்டஃப் புரொடக்ஷன்ஸ்சார்பில் தயாரிப்பாளர்கள் ஈ.ஆர். டில்லி பலராமன் மற்றும் ஜெகதீஸ்வரன் டில்லி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் லைன் புரொடக்ஷன் பணிகளை கிளஸ்டர்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
சுரேஷ் செல்லப்பன் மற்றும் அருண் கார்த்திக் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
முனீஸ்காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன், சமூக வலைதளப் பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்திருப்பதால், இளம் தலைமுறையினரை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தி டோர்ம் – The Dorm’ உருவாகியிருப்பது ஃபர்ஸ்ட் லுக் மூலம் தெரிய வருகிறது. தற்போது விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
