ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ அக்டோபர் 2ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!
தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்றான ‘சிக்மா’, அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படத்தில் இருந்து இதுவரை வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ மற்றும் ‘அய்யய்யோ அம்மாடி’ ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இரு பாடல்களும் முற்றிலும் மாறுபட்ட இசை மற்றும் காட்சியமைப்பில் வெளியாகியுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
‘சிக்மா’ படத்தின் முழுமையான கதைக்களம் இன்னும் வெளிப்படுத்தப்படாத நிலையில், டீசர் மற்றும் பாடல்கள் மூலம் வெளியாகியுள்ள காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு வண்ணமயமான, பொழுதுபோக்கு நிறைந்த திரைப்பட அனுபவத்தை எதிர்பார்க்க வைத்துள்ளன. எனர்ஜி நிறைந்த ‘சிக்மா ஸ்டைல்’ பாடலும், மெலோடி அம்சத்தில் உருவாகியுள்ள ‘அய்யய்யோ அம்மாடி’ பாடலும் படத்தின் மாறுபட்ட உலகத்தை வெளிப்படுத்தியுள்ளன.
படத்தின் பணிகள் திட்டமிட்டபடி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய், படத்தின் உருவாக்கத்தில் காட்டிய தெளிவு, தொழில்முறை அணுகுமுறை மற்றும் ஒவ்வொரு பணியிலும் வெளிப்படுத்திய நுணுக்கமான கவனம் ஆகியவற்றையும் லைகா புரொடக்ஷன்ஸ் பாராட்டியுள்ளது.
இதுகுறித்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறுகையில், “‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. குறிப்பாக, பாடல்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. சுவாரஸ்யம் கருதி படத்தின் மையக்கதையையும் பல முக்கிய அம்சங்களையும் தற்போது வெளிப்படுத்தாமல் வைத்துள்ளோம். இதுவரை வெளியிட்டுள்ள சில காட்சிகள் மூலம், ஜேசன் சஞ்சய் உருவாக்கியுள்ள வண்ணமயமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த உலகத்தின் சிறிய அறிமுகத்தை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்கியுள்ளோம்” என்றார்.
படத்திற்காக புதுமையான விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளையும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு தொடர்பான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜேசன் சஞ்சய் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் எஸ். இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். பெஞ்சமின் எம். கலைத்துறையை கவனித்துள்ள நிலையில், ஹரிஹரசுதன் விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.
ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகம், சந்தீப் கிஷனின் நடிப்பு மற்றும் மாறுபட்ட இசையுடன் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
