திரைப்படத் தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி இணைந்து தொடங்கியுள்ள புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. திரைப்படத் துறையில் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, தரமான படைப்புகளை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் பிரசன்னா இப்படத்தை இயக்குகிறார்.
நிகழ்வில் திரையுலகைச் சேர்ந்த முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் கலந்து கொண்டு, தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமியின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், தியாகா குறிஞ்சிசெல்வனைப் பல ஆண்டுகளாகத் தெரியும் என்றும், அவர் தயாரிப்புத் துறைக்கு சற்று தாமதமாக வந்திருந்தாலும் சரியான நேரத்தில் வந்திருப்பதாகவும் கூறினார். ஒரு திரைப்படத்தைத் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் முடிப்பதற்குத் தயாரிப்புக்கும் முன் திட்டமிடல் மிகவும் அவசியம் என்றும், தயாரிப்பாளரும் இயக்குநரும் பட்ஜெட் குறித்து ஆரம்பத்திலேயே தெளிவாகப் பேசி செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். எதிர்காலத்தில் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தில் தாங்களும் படம் தயாரிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், இந்நிறுவனம் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து, பல புதிய இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி., தியாகா குறிஞ்சிசெல்வன் தனக்கு நண்பர் மட்டுமல்ல, சகோதரர் போன்றவர் என்று குறிப்பிட்டார். அவரது புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்கம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறிய அவர், தனது அக்கா மகனுக்காக அவர் இந்தப் படத்தைத் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது என்றார். ஒருவரை நம்பி தயாரிப்பில் பணத்தை முதலீடு செய்யும்போது, அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது படக்குழுவினரின் பொறுப்பு என்றும், தயாரிப்பாளரும் இயக்குநரும் பட்ஜெட் மற்றும் திட்டமிடல் குறித்து ஆரம்பத்திலேயே தெளிவாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
டாக்டர் ஐசரி கே. கணேஷ், தியாகா குறிஞ்சிசெல்வன் தனது தந்தையின் பெயரில் ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனத்தைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். பெற்றோரை மறக்காமல் அவர்களுக்கு மரியாதை செலுத்துபவர்கள் வாழ்க்கையில் உயர்வார்கள் என்றும், இந்நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். திரைப்படத் தயாரிப்பில் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து, திட்டமிட்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய அவர், நடிகர் ஜெய் அனைவருக்கும் பிடித்தமானவர் என்றும், இந்தப் படம் வெற்றி பெற தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நடிகர் இளவரசு, இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் பிரசன்னாவுக்குச் சரியான நேரத்தில் சரியான வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். திறமையான கலைஞர்களை உருவாக்குவதிலும், புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதிலும் தயாரிப்பாளரின் பங்கு முக்கியமானது என்றும், அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், ‘தியாகராஜா டாக்கீஸ்’ என்ற பெயர் தியாகா குறிஞ்சிசெல்வனின் தந்தையை நினைவுகூரும் வகையில் வைக்கப்பட்டிருப்பது நிகழ்வில் தெரிந்தபோது மகிழ்ச்சியடைந்ததாகக் கூறினார். நட்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் அற்புதமான மனிதர் தியாகா குறிஞ்சிசெல்வன் என்றும், அவர் தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, தியாகா குறிஞ்சிசெல்வனுக்குத் திரையுலகில் இருக்கும் நட்பும் ஆதரவும் இந்தப் புதிய முயற்சிக்குப் பெரிய பலமாக இருக்கும் என்றார். அதே நேரத்தில், தயாரிப்புச் செலவில் கவனமாக இருந்து, கதைக்குத் தேவையான அளவுக்கு மட்டுமே செலவு செய்து படத்தை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சிறிய பட்ஜெட்டில் தரமான படங்களை உருவாக்கி வெற்றி பெறுவதன் மூலம் புதிய நிறுவனத்துக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், தியாகா குறிஞ்சிசெல்வன் தனது நீண்ட நாள் நண்பர் என்றும், அனைவரிடமும் அன்புடனும் நட்புடனும் பழகக்கூடியவர் என்றும் குறிப்பிட்டார். தனது தந்தையின் பெயரை நினைவுகூரும் வகையில் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெயர் வைத்திருப்பது அவருடைய பெற்றோர் மீதான அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாகக் கூறிய அவர், தியாகராஜா டாக்கீஸ் பல வெற்றிப் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
பாடகி மாலதி, இந்த நிகழ்வு ஒரு குடும்ப விழா போல் இருப்பதாகக் குறிப்பிட்டார். தியாகா குறிஞ்சிசெல்வன் பலரிடமும் அன்புடன் பழகக்கூடியவர் என்றும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளம் கொண்டவர் என்றும் பாராட்டினார். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் பல வெற்றிப் படங்களைத் தயாரிக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
பாடகர் கிரிஷ், தியாகா குறிஞ்சிசெல்வன் தொட்டதெல்லாம் வெற்றியாக அமைய வேண்டும் என்றும், அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
இயக்குநர் மிஷ்கின், தியாகா குறிஞ்சிசெல்வனுடனான தனது நீண்டகால நட்பையும், அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் தனக்கு செய்த உதவியையும் நினைவுகூர்ந்தார். எளிமையான வாழ்க்கையிலிருந்து வந்த அவர், இன்றுவரை தனது இயல்பை மாற்றிக்கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாகப் பழகி வருவதாகக் கூறினார். சினிமா பல சவால்கள் நிறைந்த துறையாக இருந்தாலும், அது ஒரு மகத்தான கலை என்றும், அந்தக் கலையில் தியாகா குறிஞ்சிசெல்வன் வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், இப்படத்தில் தானும் பணியாற்ற இருப்பதாகவும், தனது உதவியாளர் ஈஸ்வரி இணை இயக்குநராகப் பணியாற்றுவதாகவும் கூறினார்.
நடிகர் மோகன், இந்த விழா தங்களுக்கு ஒரு குடும்ப விழா போன்றது என்று குறிப்பிட்டார். 90-களில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தொடர்ந்து தயாரித்து வெற்றி பெற்ற தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியைப் போல தியாகராஜா டாக்கீஸ் நிறுவனமும் வளர வேண்டும் என்றும், கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
நடிகர் சூரி, தியாகா குறிஞ்சிசெல்வன் அண்ணனுடனான தனது நெருக்கமான உறவைப் பற்றி பேசியதுடன், அவருடைய அன்பினால்தான் இத்தனை திரையுலகினர் இந்த நிகழ்வில் ஒன்றிணைந்திருப்பதாகக் கூறினார். புதிய தயாரிப்பு நிறுவனம் முதல் படத்திலிருந்து நூறாவது படம் வரை தொடர்ந்து நல்ல படங்களைத் தயாரித்து, தமிழ் சினிமாவில் வலுவான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று வாழ்த்தினார். மேலும், இயக்குநர் பிரசன்னாவை நீண்ட காலமாகத் தெரியும் என்றும், அவருடைய வளர்ச்சிக்கும் இந்த வாய்ப்பு முக்கியமானதாக அமையும் என்றும் தெரிவித்தார்.
இயக்குநர் பிரசன்னா, இந்தப் படத்தைத் திட்டமிட்டபடி சிறப்பாக உருவாக்குவதற்குத் தனது 100 சதவீத உழைப்பையும் வழங்குவதாகக் கூறினார். திட்டமிட்டபடி பணிகளை முடித்து, படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
நடிகர் ஜெய், தியாகா குறிஞ்சிசெல்வன் தயாரிப்பில் முதல் படத்தில் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். அவரை ‘ஜப்பான் குறிஞ்சி’ என்று அழைக்கும் அளவுக்கு ஜப்பானுடனான அவரது நெருக்கத்தை நினைவுகூர்ந்த ஜெய், குறிஞ்சிசெல்வன் மிகவும் நல்ல மனம் கொண்டவர் என்று பாராட்டினார். இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் படத்தை உருவாக்க கடினமாக உழைத்து வருவதாகவும், இந்தப் படம் வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் மேலும் பல இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் ஏ.எம். பிரபாகரன், தியாகா குறிஞ்சிசெல்வன் தனது தந்தை தியாகராஜன் அவர்களின் பெயரில் ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனத்தைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். குடும்பத்தினரை ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழும் தியாகா குறிஞ்சிசெல்வன், பலருடைய வளர்ச்சிக்கும் ஆதரவாக இருந்துள்ளார் என்றும், இந்தப் புதிய முயற்சிக்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரையுலகினரின் ஆதரவும் ஆசீர்வாதமும் தேவை என்றும் தெரிவித்தார். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் தொடர்ந்து பல நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
நிறைவாக, தயாரிப்பாளர் தியாகா குறிஞ்சிசெல்வன், தனது பெற்றோருக்கும், வாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டிய குருநாதர் சுரேஷ் சுப்ரமணியன் அவர்களுக்கும், தனது மனைவி டாக்டர் விஜயலட்சுமிக்கும் நன்றி தெரிவித்தார். திரைப்படத் தயாரிப்பில் உள்ள சவால்கள் குறித்து நிகழ்வில் பலரும் வழங்கிய ஆலோசனைகளை மனதில் வைத்து செயல்படுவதாகக் கூறினார்.
“தவறுகள் ஏற்பட்டாலும், எதிர்பார்த்தபடி படம் அமையாவிட்டாலும் எங்களைக் கைவிடாமல் வழிகாட்டுவதற்கும், எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு முன்னே அழைத்துச் செல்வதற்கும் இவ்வளவு பெரிய நண்பர்கள் பட்டாளம் எங்களுக்குப் பின்னால் இருக்கிறது என்பதுதான் இந்த முயற்சியில் இறங்குவதற்கான மிகப்பெரிய பலம். நிச்சயமாக இந்தப் பயணத்தில் வெற்றியை நோக்கித்தான் முன்னேறுவோம்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மேலும், தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் பல வெற்றிப் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற தனது கனவைப் பகிர்ந்த அவர், புதிய முயற்சிக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளிக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.