‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ சிறப்பு நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய வித்யுத் ஜம்வால்!

9

மும்பையில் நடைபெற்ற ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில், நடிகர் வித்யுத் ஜம்வால் தொடர்ந்து 15 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டு, தனது யோகக் கலை திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

பிரபல கேமிங் கதாபாத்திரமான தால்சிம் வேடத்தில் நடிப்பதன் மூலம் வித்யுத் ஜம்வால் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். யோகக் கலை மற்றும் இந்தியாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கதாபாத்திரமாக தால்சிம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ சிறப்பு நிகழ்வில் தால்சிம் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து வித்யுத் ஜம்வால் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, யோகி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தான் ஏன் சரியான தேர்வு என்பதையும் தனது செயல்பாட்டின் மூலம் நிரூபித்தார்.

தால்சிம் கதாபாத்திரத்தில் வேடமணிந்த காஸ்பிளேயர்களுடன் மேடையில் அமர்ந்த வித்யுத் ஜம்வால், தொடர்ந்து 15 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டார். எந்தவித இடையூறும் இன்றி தியானத்தை நிறைவு செய்த அவர், அதற்காக பதஞ்சலி யோக சூத்திரத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு நுட்பத்தை பயன்படுத்தியதாகத் தெரிவித்தார்.

இந்த நுட்பம் 15 நிமிடங்கள் மூச்சைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், வாழ்க்கையில் பல்வேறு உயரங்களை அடையவும் தனக்கு உதவியதாக வித்யுத் ஜம்வால் கூறினார். மேலும், இந்தப் பயிற்சியை இளம் தலைமுறையினருக்கும் கற்றுக் கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தியானம் செய்வது, எந்தவொரு விஷயமும் முழுமையான பலனைத் தருவதற்கு காலம் தேவை என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் தொடர்ந்து முயற்சி செய்வது ஆகியவற்றின் மூலம் நமது இலக்கை அடைய முடியும் என்பதே இந்தப் பயிற்சியின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இளம் தலைமுறையினருக்கு தனது அறிவுரையைப் பகிர்ந்த வித்யுத் ஜம்வால், “கொஞ்சம் நிதானமாக இருங்கள். ‘இதை எப்படி அடைவது?’ என்று கேட்கிறீர்கள். நான் இதை அடைய எனக்கு ஒரு காலம் தேவைப்பட்டது. நம்மைச் சுற்றியிருக்கும் அனைவரும் எதை நோக்கியாவது தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதுவும் செய்யாமல் நிதானமாக இருங்கள். அந்தத் திறமை உங்களை வாழ்க்கையில் வெகுதூரம் அழைத்துச் செல்லும்”என்று தெரிவித்தார்.

இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தை பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படம் 2026 அக்டோபர் 16-ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.