மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. அட்லீ வழங்கும் இப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்துள்ளனர்.
சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். கலைவாணன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஆக்ஷன் படமாகத் தொடங்கி, மனித உணர்வுகளையும் உறவுகளையும் மையப்படுத்தி சுவாரஸ்யமாக விரியும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பத்தா’, ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடம் தொடர்ந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்று வருகிறது. திரையரங்குகளிலும் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழுவினர் சார்பில் வெற்றிச் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே. பேசுகையில், தனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்த அட்லீக்கு நன்றி தெரிவித்தார். இயக்குநர் பாலாஜி தரணிதரனிடம் பணியாற்றிய அனுபவம் தனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், விஜய் சேதுபதி, லிஜோமோல் மற்றும் சிறுவன் சாய் பிரித்வி ராஜ் ஆகியோரின் நடிப்பையும் பாராட்டினார். குறிப்பாக ‘செல்ல மகளே’ பாடலின் படப்பிடிப்பின்போதே தான் உணர்ச்சிவசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ் பேசும்போது, படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார். விஜய் சேதுபதி தனது கதாபாத்திரத்தின் நுணுக்கங்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதாகவும், குறிப்பாக பாத்ரூம் காட்சியில் அவர் அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருந்ததாகவும் குறிப்பிட்டார். சிறுவன் சாய் மற்றும் லிஜோமோல் ஆகியோரின் நடிப்பையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா பேசுகையில், படத்திற்கு 80களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையிலான தோற்றத்தை உருவாக்க விரும்பியதாகவும், படத்தின் காட்சியமைப்பு அதற்கு முக்கியத் தூண்டுதலாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.
இணை வசனகர்த்தா கரன் கார்க்கி பேசும்போது, 16 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற தனது கனவு ‘பத்தா’ மூலம் நிறைவேறியுள்ளதாகக் கூறினார். சென்னை வட்டார மொழியின் பல்வேறு அடுக்குகளைப் புரிந்துகொண்டு, கதைக்கேற்ற வகையில் இயல்பான சொற்களைப் பயன்படுத்த இயக்குநர் ஆர்வம் காட்டியது தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இப்படத்தின் திரைக்கதை ஒரு பயிற்சி நிலையத்தில் பாடமாக வைக்கும் அளவிற்கு சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நடிகர் அர்ஜுன் சிதம்பரம் பேசுகையில், ‘பத்தா’ தங்களுக்கெல்லாம் முக்கியமான திரைப்படம் என்றும், கதை சொல்லப்பட்டபோது இருந்த நம்பிக்கை, படப்பிடிப்பின்போது வியப்பாக மாறியதாகவும் தெரிவித்தார். நல்ல கதையை நம்பினால் அது தன்னுடைய பார்வையாளர்களைத் தேடிக்கொண்டு வரும் என்பதற்கு ‘பத்தா’ சிறந்த உதாரணம் என்றும் அவர் கூறினார்.
நடிகர் பாலமுருகன், இது தனது முதல் திரைப்படம் என்றும், இதுவரை ஊடகங்களில் இருந்து சினிமா நிகழ்ச்சிகளைப் பார்த்து வந்த தான், தற்போது ஒரு திரைப்படத்தின் வெற்றிச் சந்திப்பு மேடையில் நிற்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். விஜய் சேதுபதியிடம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
மலையாளத் திரையுலகில் இருந்து இப்படத்தில் இணைந்த நடிகர் விஷ்ணு, கலை நம்மைத் தேர்ந்தெடுக்க வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும், இறுதியில் நமது படம் பேச வேண்டும் என்பதே இப்படத்தின் மூலம் தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எனத் தெரிவித்தார்.
நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசுகையில், ‘பத்தா’ படத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். கன்னிமா கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய அவர், படப்பிடிப்பு முதல் டப்பிங் வரை இயக்குநர் பாலாஜி தரணிதரன் மிகுந்த பொறுமையுடன் தன்னிடம் பணியாற்றியதாகக் குறிப்பிட்டார். விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றியது ஒரு சிறப்பான அனுபவம் என்றும், சக கலைஞர்களுக்கு அவர் அளிக்கும் சுதந்திரம் தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
சிறுமி சஹஸ்ரா, தேன்மொழி கதாபாத்திரத்தில் தன்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்ததுடன், படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும் நன்றி கூறினார். சபரி கதாபாத்திரத்தில் நடித்த சாய் பிரித்வி ராஜ், இது தனது முதல் திரைப்படம் என்றும், படப்பிடிப்பின் 60 நாட்களும் படக்குழுவினர் தன்னை அன்புடன் கவனித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் பேசுகையில், ஆரம்பத்தில் தன்னை நம்பிய அட்லீக்கு நன்றி தெரிவித்தார். இயக்குநர் பாலாஜி தரணிதரனின் நம்பிக்கையைப் பெற ஒவ்வொரு பாடலின் மூலமும் முயற்சி செய்ததாகவும், பின்னர் பின்னணி இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்ததாகவும் கூறினார். விஜய் சேதுபதி, லிஜோமோல் உள்ளிட்ட படக்குழுவினரின் நடிப்பை வெகுவாகப் பாராட்டிய அவர், இந்தப் படத்தின் மூலம் தனக்கு கிடைத்த அனுபவம் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், இப்படத்தை உருவாக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். முதலில் விஜய் சேதுபதியிடம் கதையைச் சொன்னதாகவும், அவர் கதையை விரும்பியதன் காரணமாக அட்லீயிடம் அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார். விஜய் சேதுபதி இயக்குநர்களின் நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
லிஜோமோல் ஜோஸ், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பையும் இயக்குநர் பாராட்டினார். 80களின் உலகத்தை திரையில் உருவாக்க முத்துராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியதாகவும், சாய் அப்யங்கரின் இசை படத்தை மற்றொரு உயரத்திற்கு எடுத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசுகையில், ‘பத்தா’ வணிக சினிமாவுக்குள் கலையை கொண்டு வந்த திரைப்படம் என்று குறிப்பிட்டார். இப்படம் தனது வாழ்க்கையுடனும் தொடர்புடையதாக இருப்பதால் மனதிற்கு நெருக்கமான படமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் முராத் கெதானி பேசுகையில், இப்படத்தில் தன்னையும் இணைத்துக் கொண்ட அட்லீக்கு நன்றி தெரிவித்தார். இயக்குநர் பாலாஜி தரணிதரன், விஜய் சேதுபதி, முத்துராஜ் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரையும் பாராட்டிய அவர், இப்படம் தங்களுக்கு மிகவும் முக்கியமான திரைப்படம் என்றும், தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் முக்கியப் பேச்சாக அமைந்த விஜய் சேதுபதியின் உரையில், படத்திற்கு ஆதரவு அளித்த பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். ஒரு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் சென்ற பிறகு, அது அவர்களின் படமாக மாறிவிடுகிறது என்றும், ‘பத்தா’வை ரசிகர்கள் தங்களது படமாக ஏற்றுக்கொண்டு கொண்டாடி வருவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
மேலும், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கிய முந்தைய படங்களான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகியவற்றை குறிப்பிட்ட விஜய் சேதுபதி, அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தில் நடித்ததாகத் தெரிவித்தார். சிறுவன் சாய் பிரித்வி ராஜ் சிறப்பாக நடித்திருப்பதாகவும், அவர் தனது எதிர்காலத்தில் கவனம் செலுத்தி நன்றாகப் படிக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார். லிஜோமோல் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டிய அவர், இப்படத்தைத் தங்களது படமாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தார்.
நிறைவாகப் பேசிய தயாரிப்பாளர் அட்லீ, தன்னுடைய சினிமா பயணத்தில் எதிர்கொண்ட விமர்சனங்களையும் சவால்களையும் குறிப்பிட்டு, நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிப்பதே தனது அணுகுமுறை எனத் தெரிவித்தார். ‘பத்தா’ படத்தை நம்பி தன்னுடன் இணைந்த தயாரிப்பாளர் முராத் கெதானிக்கு நன்றி தெரிவித்த அவர், விஜய் சேதுபதியை நல்ல மனிதர் என்றும் சிறந்த நடிகர் என்றும் பாராட்டினார்.
விஜய் சேதுபதியை இந்திய அளவில் மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அட்லீ வெளிப்படுத்தினார். மேலும், சாய் அப்யங்கர் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக வளர்வார் என நம்பிக்கை தெரிவித்தார்.
‘பத்தா’ படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த வெற்றிச் சந்திப்பு, படக்குழுவினரின் உற்சாகமான பகிர்வுகளுடன் நிறைவடைந்தது.









