நம்பிக்கை, மனிதநேயம், சமூக மாற்றம்: ரெயின்ட்ராப்ஸ் 15ஆம் ஆண்டு விழா

13

மனிதநேயம், சமூக சேவை மற்றும் மாற்றத்திற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக பயணித்து வரும் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு, தனது 15ஆம் ஆண்டு விழாவை “நம்பிக்கை, மனிதநேயம் மற்றும் சமூகத் தாக்கத்தின் 15 ஆண்டுகள்” என்ற சிறப்புத் தலைப்பில் சென்னையில் விமரிசையாகக் கொண்டாடியது.

இந்த சிறப்பு விழாவில், ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நீண்டகால சமூகப் பயணத்தில் பங்காற்றிய முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், பயனாளிகள் மற்றும் நல விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் கடந்த 15 ஆண்டுகால பயணம், அதன் முக்கிய சமூக நலத் திட்டங்கள், சாதனைகள் மற்றும் அந்த முயற்சிகளால் வாழ்க்கையில் மாற்றத்தை கண்ட பயனாளிகளின் அனுபவங்களை பதிவு செய்த “நம்பிக்கை, மனிதநேயம் மற்றும் சமூகத் தாக்கத்தின் 15 ஆண்டுகள்” என்ற சிறப்பு நூல் வெளியிடப்பட்டது.

இந்த நூலை விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் வெளியிட, முதல் பிரதிகளை வேலம்மாள் கல்வி குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன் மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் சுதா ராமன், இ.வ.ப ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் விஜிபி குழுமத்தின் முதன்மை இயக்குநர் விஜிபி ராஜதாஸ், இயற்கை வேளாண் விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், டாக்டர் டி.வி. தேவராஜன், ஊடக ஆளுமை ரமேஷ் பிரபா, தொழிலதிபர்கள் பிரித்வி பாலன் மற்றும் பூபேஷ் நாகராஜன், ஆனந்தம் பாகீரதி ராமமூர்த்தி, விளக்குக்கடை ராஜலட்சுமி சிவசங்கரன், மாற்றம் சுஜித் குமார், கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

இசையமைப்பாளரும் ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நல்லெண்ணத் தூதருமான ஏ.ஆர். ரஹைனா விழாவிற்கு தலைமை வகித்தார். ரெயின்ட்ராப்ஸ் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சமூக மாற்றத்திற்காக அமைப்பு மேற்கொண்டு வரும் மனிதநேயப் பணிகளும் அதன் 15 ஆண்டுகால அர்ப்பணிப்பும் பாராட்டப்பட்டன.

பயனாளிகளின் நெகிழ்ச்சியான ராம்ப் வாக்

விழாவின் மிகவும் கவனம் ஈர்த்த நிகழ்வுகளில் ஒன்றாக, ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பயனாளிகள் பங்கேற்ற சிறப்பு ராம்ப் வாக் நடைபெற்றது.

தன்னம்பிக்கையுடனும் பெருமையுடனும் மேடையில் நடைபோட்ட அவர்கள், அந்த நிகழ்வை வெறும் ராம்ப் வாக் ஆக மட்டுமல்லாமல், கண்ணியம், தன்னம்பிக்கை, மன உறுதி, உள்ளடக்கம் மற்றும் சம வாய்ப்பு ஆகியவற்றின் கொண்டாட்டமாக மாற்றினர்.

ஒவ்வொருவருக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்தவும், சமூகத்தின் முன் கௌரவத்துடன் நிற்கவும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் அடிப்படை நோக்கத்தை இந்த நிகழ்வு பிரதிபலித்தது.

மூத்த குடிமக்களுக்காக ‘ரெயின்ட்ராப்ஸ் அன்பகம்’

15ஆம் ஆண்டு விழாவில் ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் அடுத்தகட்ட மனிதநேய முயற்சியாக ‘ரெயின்ட்ராப்ஸ் அன்பகம்’என்ற புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டது.

சென்னையில் உருவாக்கப்பட உள்ள இந்தத் திட்டம், ஆதரவற்ற, புறக்கணிக்கப்பட்ட, தனிமையில் வாழும் மற்றும் பராமரிப்பு தேவைப்படும் மூத்த குடிமக்களுக்கான இலவச இல்லமாக செயல்பட உள்ளது. தங்குமிட வசதியுடன் பகல்நேர பராமரிப்பும் வழங்கும் வகையில் இந்த மையம் உருவாக்கப்படவுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழல், அன்பான பராமரிப்பு, சத்தான உணவு, தேவையான மருத்துவ உதவி, உணர்வுப்பூர்வமான ஆதரவு, பொழுதுபோக்கு மற்றும் சமூகத்துடன் இணைந்திருக்கும் வாய்ப்பு உள்ளிட்ட முழுமையான வசதிகளை வழங்குவதே ‘ரெயின்ட்ராப்ஸ் அன்பகம்’ திட்டத்தின் நோக்கமாகும்.

வாழ்க்கையின் முதுமைப் பருவத்தில் யாரும் தனிமையிலும் ஆதரவின்றியும் இருக்கக் கூடாது; அன்பு, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான ஒரு இல்லம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்பட உள்ளது.

நம்பிக்கையை விதைத்து, மனிதநேயத்தை வளர்த்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் தனது 15 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய ரெயின்ட்ராப்ஸ், ‘அன்பகம்’ திட்டத்தின் மூலம் தனது சமூகப் பணியின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.