அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் நடிப்பில் ‘ஒன்ஸ்மோர்’ ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்

47

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

பிரபல மாடல் சோனா ஒலிக்கல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களைக் கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

“கவிதை போல அழகாக இருந்தது ‘ஒன்ஸ்மோர்’” – இரா சரவணன்

விழாவில் பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான இரா சரவணன், “‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்தபோது கவிதை போல அவ்வளவு அழகாக இருந்தது. அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்தாலும் எனக்கு பிடிக்கும். ஆனால், இந்தப் படத்தில் முழுமையான கதாநாயகனாக அவர் கலக்கியிருக்கிறார். அதிதி ஷங்கரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ரசிகர்கள் திரையரங்கில் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு இப்படம் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

“தமிழில் நான் மிகவும் ரசித்து பணியாற்றிய படம்” – ஹேஷாம் அப்துல் வஹாப்

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசுகையில், “‘ஹிருதயம்’ படத்திற்குப் பிறகு நான் மிகவும் ரசித்து பணியாற்றிய திரைப்படங்களில் ஒன்று ‘ஒன்ஸ்மோர்’. அனைவரும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய அழகான கதையை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார். இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகிறார்கள். அவை காலம் கடந்தும் ரசிக்கப்படும் என்று நம்புகிறேன்” என்றார்.

“இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது” – அதிதி ஷங்கர்

நடிகை அதிதி ஷங்கர் பேசுகையில், “என் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இந்தப் படம் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் அஞ்சலி கதாபாத்திரமாக வாழ்ந்த ஒவ்வொரு நாளும் எனக்கு மனதளவில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அதனால் இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமானது.

அர்ஜுன் தாஸை இதுவரை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்தப் படத்தில் அவரை ஒரு லவர் பாயாக ரசிகர்கள் கொண்டாட வேண்டும். ‘ஒன்ஸ்மோர்’ ஒரு அழகான டிராமா; அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

“எனக்காக உறுதியாக நின்றார் இயக்குநர்” – அர்ஜுன் தாஸ்

நடிகர் அர்ஜுன் தாஸ் பேசுகையில், “விக்னேஷ் ஸ்ரீகாந்த் இந்தக் கதையை பல நிறுவனங்களிடம் எடுத்துச் சென்றபோது, வேறு நடிகரை வைத்து படம் செய்யலாம் என்று சிலர் கூறியுள்ளனர். ஆனால், ‘இந்தக் கதையில் ரகு கதாபாத்திரமாக அர்ஜுன் தாஸ் மட்டும்தான் நடிக்க முடியும்’ என்று இயக்குநர் எனக்காக உறுதியாக நின்றிருக்கிறார்.

என்னை முழுமையாக நம்பிய விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு என் நன்றி. இது அவருடைய அறிமுகத் திரைப்படம் என்பதால், அவருக்கு இந்தப் படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் இப்படம் அவரது திறமையை நிச்சயம் வெளிப்படுத்தும்” என்றார்.

மேலும், ஹேஷாம் அப்துல் வஹாபின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பதாகவும், அதிதி ஷங்கர் மற்றும் சோனாவின் நடிப்பையும் அவர் பாராட்டினார்.

“இந்தப் படம் மணிரத்னத்திற்கு என் லவ் லெட்டர்” – இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த்

இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் பேசுகையில், “இந்த நாளுக்காக நான் நீண்ட காலமாகக் காத்திருந்தேன். ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னத்திற்கு சமர்ப்பிக்கிறேன். அவருடைய படங்களைப் பார்த்துதான் நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவருக்கான என்னுடைய லவ் லெட்டர்தான் இந்தப் படம்.

இந்தக் கதையை எழுத ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே ரகு கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர் அந்தக் கதாபாத்திரமாக முழுமையாக வாழ்ந்திருக்கிறார். அதிதி ஷங்கர், சோனா மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்” என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் நம்பிக்கை

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில், பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தாமதமானாலும், தற்போது ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாவது உறுதியாகிவிட்டதாக தெரிவித்தார். இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தின் திறமைக்கு இப்படம் ஒரு முக்கிய அடையாளமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், அர்ஜுன் தாஸின் அர்ப்பணிப்பும், அதிதி ஷங்கரின் ஒத்துழைப்பும் படத்தின் மிகப்பெரிய பலம் என அவர் பாராட்டினார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.