‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை வர்ஷினி கார்மேகம், நடிப்பு மீதான தனது ஆர்வம், திரைப்பயணத்தின் தொடக்கம் மற்றும் தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் நடிகர்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் படித்த வர்ஷினி, குறும்படங்கள் மற்றும் மேடை நாடகங்கள் மூலம் நடிப்புத் துறையின் மீது ஆர்வம் கொண்டார். தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்த அவர், அதன் மூலம் கேமரா முன் நடிப்பதற்கான தன்னம்பிக்கையையும் படிப்படியாக வளர்த்துக் கொண்டார்.
வர்ஷினியின் கலைப் பயணத்தில் பரதநாட்டியத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது. உணர்வுகளை வெளிப்படுத்துவது, உடல் மொழி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் பரதநாட்டியம் தனக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். நடிப்புடன் இணைந்த இந்த அனுபவம், கதாபாத்திரங்களை புரிந்துகொண்டு அவற்றை வெளிப்படுத்துவதற்கு தனக்கு உதவியாக இருப்பதாகவும் கூறுகிறார்.
இந்தி சினிமா மீது தனக்கு தனி ஈர்ப்பு இருப்பதாகக் கூறும் வர்ஷினி, கேமரா முன்பு நடிப்பதைத் தாண்டி கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த நடிகைகளான தபு, ரேகா, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷோபனா ஆகியோரை தனது முன்மாதிரிகளாகக் குறிப்பிடுகிறார். இந்தி மொழியை நன்றாகப் படிக்கவும், சரியாக உச்சரிக்கவும் முடியும் என்பதால், எதிர்காலத்தில் பல்வேறு மொழிகளில் நடிக்கும் வாய்ப்புகள் தனக்கு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“இந்தி தெரிந்திருப்பது ஒரு கலைஞருக்கு இன்னும் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும். குறிப்பாக ஓடிடி தளங்கள் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், ஒரே மொழிக்குள் சுருங்கிவிடாமல் பல்வேறு கதாபாத்திரங்களையும் வாய்ப்புகளையும் தேடிச் செல்ல இது உதவும்” என வர்ஷினி தெரிவித்துள்ளார்.
தற்கால நடிகர்களில் சாய் பல்லவியின் இயல்பான நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல், நடிகர் தனுஷின் பன்முகத்தன்மை மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காகவும் தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ளும் திறன் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றும் வர்ஷினி தெரிவித்துள்ளார்.
நடிப்பைத் தவிர இசையிலும் ஆர்வம் கொண்டுள்ள வர்ஷினி, யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகியோரின் இசைக்கு ரசிகை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது திரைப்பயணத்தில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் முக்கியமான மைல்கல் எனக் கருதும் வர்ஷினி, குறும்படங்களில் இருந்து அடுத்த கட்டமாக திரைத்துறையில் தனது திறமையை வெளிப்படுத்த இந்தப் படம் ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நடிப்பு, நடனம் மற்றும் கலை மீதான தனது ஆர்வத்தை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் தளமாகவும் இப்படத்தை அவர் பார்க்கிறார்.
கோயம்புத்தூரில் இயற்பியல் படித்த இளம் பெண்ணாக இருந்து, குறும்படங்கள், மேடை அனுபவங்கள் வழியாக தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்துள்ள வர்ஷினி கார்மேகத்தின் பயணம், எதிர்பாராத பாதைகளும் புதிய கனவுகளுக்கான கதவுகளைத் திறக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.


