பேய், அறிவியல், விண்வெளி, காலம்… பல உலகங்களை இணைக்கும் ‘நோவா’!

13

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ் மற்றும் “ஃபைனலி” சுவாதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நோவா’. மைலோ எழுதி இயக்கியுள்ள இப்படம், வழக்கமான பேய் மற்றும் திகில் கதைகளின் பாதையைத் தாண்டி, அறிவியல், நினைவுகள், காலம் மற்றும் அமானுஷ்யம் ஆகியவற்றை இணைக்கும் வித்தியாசமான திரில்லர் அனுபவமாக உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் திகில் திரைப்படங்கள் என்றாலே பேய், பங்களா, பழிவாங்கல் போன்ற அம்சங்கள் நினைவுக்கு வரும் நிலையில், ‘நோவா’ அந்த வழக்கமான பாதையிலிருந்து விலகி புதிய உலகத்தை உருவாக்க முயற்சிக்கிறது. படத்தின் கதைக்களம் குறித்து முழுமையான தகவல்களை வெளிப்படுத்தாமல், பார்வையாளர்களுக்குத் தொடர்ந்து கேள்விகளை எழுப்பும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படம் முடிந்த பிறகும் அதன் மர்மம் குறித்து ரசிகர்கள் சிந்திக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதே இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக கூறப்படுகிறது.

“இந்தப் படத்தை ஒரு திகில் திரைப்படமாக மட்டும் பார்க்கக்கூடாது. பயத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய மர்மத்தைச் சொல்லும் திரைப்படம் இது. பார்வையாளர்கள் படம் முடிந்த பிறகும் சில கேள்விகளுடன் வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்” என இயக்குநர் மைலோ தெரிவித்துள்ளார்.

‘நோவா’ படத்தின் காட்சியமைப்பிலும் படக்குழு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, படத்தின் எந்தக் காட்சியிலும் சூரிய ஒளி தெரியக்கூடாது என்பதே படக்குழுவின் முக்கியமான காட்சியமைப்பு அணுகுமுறையாக இருந்துள்ளது. இதற்காக இயற்கையான கருமேகச் சூழலை எதிர்பார்த்து காத்திருந்து பல காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

தொடர்ந்து 32 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பு முழுவதும் கேரளாவில் உள்ள மலைப்பகுதி கிராமம் ஒன்றில் நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு தளத்திற்குச் செல்வதே மிகவும் சவாலானதாக இருந்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார். கடினமான பாதைகள் மற்றும் இயற்கைச் சூழலையும் பொருட்படுத்தாமல் நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். திரையில் அந்த உலகம் செயற்கையாகத் தெரியக்கூடாது என்பதற்காகவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

‘நோவா’வில் பார்வையாளர்களின் அறிவாற்றலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கதையில் வரும் ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாக விளக்குவதற்குப் பதிலாக, காட்சிகள், வசனங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் மூலமாக ரசிகர்களே சில விஷயங்களை புரிந்துகொள்ளும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

“படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். பார்வையாளர்கள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால், எதையும் பெரிதாக விளக்கிச் சொல்லவில்லை” என்கிறார் இயக்குநர் மைலோ.

இதனால் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு சிறிய காட்சிக்கும், வசனத்திற்கும், கதாபாத்திரத்தின் பார்வைக்கும் கூட முக்கியத்துவம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் உண்மையான மர்மத்தை முன்கூட்டியே வெளிப்படுத்தாமல் இருப்பதே படக்குழுவின் நோக்கமாகவும் உள்ளது.

பேய், பிசாசு, அறிவியல் புனைவு, அமானுஷ்யம், விண்வெளி மற்றும் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்கள் என பல்வேறு அம்சங்கள் ஒன்றோடொன்று இணையும் வகையில் ‘நோவா’ உருவாகியுள்ளது. மேலும், பல வெளிமாநில நடிகர்களும் இப்படத்தில் முக்கியமான சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், இவர்களின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இப்படத்தில் ரைசா வில்சனின் கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமானதாக அமைந்துள்ளது. குறிப்பாக, அவருடைய கதாபாத்திரத்திற்கு ஒரு வசனம் கூட இடம்பெறவில்லை. வசனங்கள் இல்லாமலேயே பார்வை மற்றும் உடல் மொழியின் மூலம் கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் இருப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“ரைசாவை இந்தப் படத்தில் முற்றிலும் வேறு விதமாகப் பார்ப்பீர்கள். அவருக்கு வசனமே கிடையாது. ஆனால் அவருடைய பார்வையே நிறைய விஷயங்களைச் சொல்லும்” என இயக்குநர் மைலோ தெரிவித்துள்ளார்.

வழக்கமான திகில் திரைப்படங்களிலிருந்து விலகி, பயத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி காலம், நினைவுகள், அறிவியல் மற்றும் மனிதர்களின் மனநிலையை ஆராயும் திரைப்படமாக ‘நோவா’ உருவாகி வருகிறது. கதையின் முக்கிய ரகசியங்களை முன்கூட்டியே வெளிப்படுத்தாமல், ரசிகர்களே திரையரங்கில் கண்டுபிடிக்க வேண்டிய பல அடுக்குகளுடன் இப்படம் உருவாகியிருப்பதால், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ‘நோவா’, வித்தியாசமான கதை, இருண்ட காட்சியமைப்பு மற்றும் மர்மம் நிறைந்த திரைக்கதையுடன் ரசிகர்களுக்கு புதியதொரு திகில்–திரில்லர் அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.