ஆவேசமான அருள்நிதி… வித்தியாசமான அமீர் – ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!

14

7 Miles Per Second Productions தயாரிப்பில், ‘பம்பர்’ படத்தை இயக்கிய M. செல்வகுமார் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘வேட்ட சாமி’. அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.

திரை பிரபலங்களான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து ‘வேட்ட சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை வெளியிட்டனர். வெளியான காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றன.

வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், கதையையும் கதாபாத்திரங்களையும் மையப்படுத்தி நகரும் படமாக ‘வேட்ட சாமி’ உருவாகியுள்ளது. நெல்லை மாவட்ட மக்களின் பாரம்பரிய காவல் தெய்வ வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட குலதெய்வ வழிபாடுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து தலைமுறைகளாக தொடரும் சமூகப் பிரச்சினைகளை, மக்களின் வாழ்வியலோடு இணைத்து பதிவு செய்யும் ஆக்‌ஷன் எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருள்நிதி, சாமி வந்து ஆவேசமாக ஆடும் தோற்றத்தில், தீவிரமான பார்வையுடன் காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்னணியில் பிரம்மாண்டமான சாமி சிலை மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் போஸ்டர் படத்தின் கிராமிய மற்றும் ஆன்மிகப் பின்னணியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அதேபோல், படத்தின் கிளிம்ப்ஸ் வில்லிசைக் கலைஞர் மாதவியின் குரலில் தொடங்குகிறது. பாரம்பரிய தெய்வ வழிபாட்டின் பின்னணியில் அருள்நிதி மற்றும் அமீர் ஆகியோரின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் கிளிம்ப்ஸ் அமைந்துள்ளது. கிராமிய வாழ்வியலையும் ஆன்மிக உணர்வையும் ஆக்‌ஷன் மற்றும் எமோஷனுடன் இணைத்திருக்கும் இந்தக் காட்சிகள், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இப்படத்தில் ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி, இயக்குநர் தமிழ், கவிதா பாரதி, அயாஸ் கான், டி.எஸ்.கே, ஓ.ஏ.கே. சுந்தர், அர்ஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘பம்பர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் M. செல்வகுமார் எழுதி இயக்கும் இப்படத்தை 7 Miles Per Second Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். G. துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்ற, சிறுத்தை கணேஷ் சண்டைப்பயிற்சியை கவனித்துள்ளார்.

‘வேட்ட சாமி’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அருள்நிதி – அமீர் கூட்டணியில், கிராமிய வாழ்வியலையும் காவல் தெய்வ வழிபாட்டையும் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ள நிலையில், ‘வேட்ட சாமி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.