ஈட்டியுடன் ஆக்ரோஷமான ராஷ்மிகா… நவம்பர் 27-ல் வெளியாகிறது ‘மைசா’!

16

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’, வரும் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படத்தின் மீது ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் முதல் பார்வை வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

போஸ்டரில் கையில் பிரம்மாண்டமான ஈட்டியுடன் ராஷ்மிகா மந்தனா ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். முகத்தில் போர்க்காயங்கள், பின்னணியில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டம் மற்றும் தீப்பிழம்புகள் என இடம்பெற்றுள்ள காட்சிகள், படத்தின் வலிமையான ஆக்‌ஷன் உலகத்தை எடுத்துக்காட்டுகின்றன. பாரம்பரிய உடைகள் மற்றும் ஆயுதங்களுடன் ராஷ்மிகாவின் தோற்றம், ‘மைசா’ ஒரு வித்தியாசமான வரலாற்றுப் பின்னணி கொண்ட ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியிருப்பதை உணர்த்துகிறது.

இப்படத்தில் கோண்ட் பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கதாபாத்திரத்தின் உணர்வையும் தீவிரத்தையும் இயல்பாக வெளிப்படுத்துவதற்காக, உடல் ரீதியாகவும் நடிப்பிலும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அவர் தயாராகி வருகிறார்.

பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரைப்படங்களின் எல்லைகளைத் தாண்டி, இந்திய சினிமாவின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கே புதிய தரத்தை உருவாக்கும் நோக்கில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அதிரடியான ஸ்டண்ட் காட்சிகளுடன், பார்வையாளர்களுக்கு பரபரப்பும் அட்ரினலின் நிறைந்த திரையரங்க அனுபவமும் வழங்கும் வகையில் படத்தின் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், படப்பிடிப்பின்போது மிகவும் சவாலான ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது ராஷ்மிகா மந்தனாவுக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து முழுமையாக குணமடைந்து வரும் அவர், விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்யவுள்ளார். படத்தின் முதன்மை படப்பிடிப்பில் இன்னும் 12 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், ‘மைசா’ திரைப்படத்தின் பின்னணி பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் பிரம்மாண்டமான காட்சியமைப்பை உருவாக்கும் வகையில் அதிநவீன VFX பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனுடன், படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கும் வலு சேர்க்கும் வகையில் சக்திவாய்ந்த பின்னணி இசை மற்றும் ஒரிஜினல் ஸ்கோர் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், தாரக் பொன்னப்பா, நிதி சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஷ்ரேயாஸ் பி. கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், ஜேக்ஸ் பிஜாய்இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் நிபுணர் ஆண்டி லாங்ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். கேச்சா காம்பாக்டீ ஸ்டண்ட் பணிகளில் பங்களித்துள்ளார்.

அஜய் சாய்புரெட்டி, அனில் சய்யாபுரெட்டி மற்றும் வீரசாய் கோபா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஸ்ரீகாந்த் ரெட்டி சாத்தி இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பையும், ஆயிஷா மரியம் ஆடை வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். VFX பணிகளை நாகு தலாரி மற்றும் அசோக் மொச்சர்லா மேற்கொள்கின்றனர்.

பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘மைசா’, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘மைசா’ – நவம்பர் 27, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!