சமூக நீதி மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘யானை மரம்’ திரைப்படத்தை பள்ளி மாணவர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் பேரரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமையா ரவிச்சந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘யானை மரம்’ திரைப்படத்தை இயக்குநர் பேரரசு பார்வையிட்டு பாராட்டியுள்ளார். தனது சிறுவயது நினைவுகளுக்குள் அழைத்துச் சென்ற அற்புதமான படைப்பு என அவர் குறிப்பிட்டதுடன், மாணவ, மாணவிகள் அனைவரும் பார்க்க வேண்டிய அறிவுப்பூர்வமான திரைப்படம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘யானை மரம்’ திரைப்படம் தன்னை மீண்டும் தனது சிறுவயது காலத்திற்கே அழைத்துச் சென்றதாகவும், இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன் படத்தை மட்டுமல்லாமல் பார்வையாளர்களையும் இயக்குகிறார் என்றும் பாராட்டியுள்ளார்.
மேலும், சமூக நீதியை படத்திற்கு நீராகவும், மனிதநேயத்தை உரமாகவும் இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன் வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட பேரரசு, குறிப்பாக பள்ளி மாணவர்கள் அனைவரும் காண வேண்டிய முக்கியமான படைப்பு ‘யானை மரம்’ என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால், ‘யானை மரம்’ திரைப்படத்தை பள்ளி மாணவர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் இயக்குநர் பேரரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல், திரைப்படத்தை பார்த்த இ.வி. கணேஷ் பாபு, ‘யானை மரம்’ திரைப்படத்தை தேசிய விருதுக்கு அனுப்பக்கூடிய தரமான படைப்பு என பாராட்டியுள்ளார்.
எதைப் பற்றிய படம் ‘யானை மரம்’?
பழங்குடியின மக்கள் வசிக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பரமுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. தனக்கு கிடைக்க வேண்டிய வெறும் ஐந்து ரூபாய் உரிமைக்காக பரமு போராடுகிறான்.
அதே நேரத்தில், சிறுவயதில் தான் நட்டு வைத்த மா விதை ஒன்று, காலப்போக்கில் யானையின் உருவத்தைப் போன்ற மரமாக வளர்ந்து நிற்பதைப் பார்த்து அவன் ஆச்சரியமடைகிறான்.
அந்த மரத்தை தனது நண்பனாக பாவிக்கும் பரமு, தனது மகிழ்ச்சி, துயரம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளையும் அதனிடம் பகிர்ந்து கொள்கிறான். சமூகத்தில் தனக்கான உரிமையை பரமு பெற்றானா? அவனுக்கும் அந்த யானை மரத்திற்கும் இடையேயான நட்பு என்ன ஆனது? என்பதே படத்தின் மையக் கதை.
படத்தில் நடித்துள்ளவர்கள்
இந்தக் கதையில் மாஸ்டர் அபினேஷ், ஜோதி கண்ணன், செம்புலி ஜெகன், சீனு, ராணி, மஞ்சு, லீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராமையா ரவிச்சந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் சித்தார்தாஇசையமைத்துள்ள இப்படத்திற்கு தமிழ் மாறன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். அபிராம் கலை இயக்கத்தையும், கோபால் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.
கோவிந்தராஜ் மக்கள் தொடர்புப் பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஓப்பன் விண்டோ பிக்சர்ஸ் சார்பில் ஆர். சசிகலா இப்படத்தை தயாரித்துள்ளார்.
20 சர்வதேச விருதுகள்
‘யானை மரம்’ திரைப்படம் இதுவரை 20 சர்வதேச விருதுகளை வென்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் 16 இடங்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
சமூக நீதி, மனிதநேயம், குழந்தைகளின் உலகம் மற்றும் உரிமைக்கான போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ள ‘யானை மரம்’, விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




