ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பேசுகையில், “இந்தப் படத்தை தயாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் ராஜா, ஹீரோ ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ராஜா கதை சொன்ன உடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. தற்போது அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்ற மொழிகளிலும் இப்படத்தை கொண்டு செல்லும் எண்ணம் உள்ளது. ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ படங்களைத் தொடர்ந்து தமிழில் எங்களுக்கு இது மூன்றாவது வெற்றிப் படம். ‘இருமுடி கட்டு’ படத்தையும் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி, “ஒரு நல்ல படத்தில் பணியாற்றியிருக்கிறோம் என்ற திருப்தி உள்ளது. வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.
படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜூனன், “என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் நன்றி. அந்த நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறோம் என நினைக்கிறேன். என்னுடைய முதல் படத்திலேயே பாராட்டுகள் கிடைத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.
பப்ளிசிட்டி டிசைனர் வியாகி, “ராஜா கதை சொன்னதில் இருந்து இது எங்களுடைய படமாகிவிட்டது. படக்குழுவினர் அனைவரும் பாசிட்டிவாக பணியாற்றினார்கள். அதன் முடிவு தற்போது பிரம்மாண்டமான வெற்றியாக மாறியுள்ளது” என்றார்.
நடிகைகள் சுமித்ரா தேவி, வர்ஷினி கார்மேகம், இனியா ராம், தீபிகா உள்ளிட்டோரும் படத்தின் வெற்றி குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக இனியா ராம், “அறிமுக இயக்குநர் ராஜாவின் கதையை நம்பி வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. படத்தை பார்த்த பலரும் பாக்யராஜ் படத்தை பார்த்தது போன்ற உணர்வு இருப்பதாக கூறுகிறார்கள். அடுத்த ஐந்து வருடங்களுக்குள் இயக்குநர் ராஜா முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இருப்பார் என நம்புகிறேன். ரிஷிகாந்தும் திறமையான நடிகர். தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்” என்றார்.
நடிகர் திலீப் பேசுகையில், “பல நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் மகிழ்ச்சியுடன் வெளியேறுவதை பார்த்தேன். இதற்காக படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் கார்த்திகேயன் டிகே, “எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் நன்றி. இந்தப் படத்தில் நடித்தவர்கள் மற்றும் பணியாற்றிய அனைவருக்கும் இப்படம் மிகவும் முக்கியமானது. இது என்னுடைய நீண்ட பயணத்தின் முதல் படியாக இந்த வெற்றியை பார்க்கிறேன்” என்றார்.
நடிகர் அப்துல் லீ, “இந்தப் படத்தில் வாய்ப்பு வழங்கிய தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பலரையும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. பல வருட உழைப்புக்குப் பிறகு என்னுடைய முகமும் இந்தப் படத்தின் போஸ்டரில் இடம்பெற்றிருப்பது நெகிழ்ச்சியாக உள்ளது. படத்தை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
இசையமைப்பாளர் பரத் சங்கர், “என்னுடைய இசைப் பயணத்தில் ‘மொத ராத்திரி’ ஒரு முக்கியமான மைல்கல். சின்ன படம், பெரிய படம் என்று இல்லை; நல்ல படம், சுமாரான படம் என்றுதான் பிரிக்க முடியும். ஓடக்கூடிய படத்தின் இயக்குநராக இருக்க வேண்டும் என்று ராஜா அடிக்கடி கூறுவார். அவருக்கு வாழ்த்துக்கள். இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி” என்றார்.
நடிகர் சேத்தன் பேசுகையில், “பல புதிய திறமைகளுக்கு வாய்ப்பு வழங்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இதை தொடர்ந்து செய்ய வேண்டும். படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினோம். இந்தப் படத்திலிருந்து பல திறமையான நடிகர், நடிகைகள் உருவாக இருக்கிறார்கள். ரிஷிகாந்தை திரையில் பார்க்கும்போது இளம் வயது அமிதாப் பச்சனை பார்ப்பது போல இருந்தது” என பாராட்டினார்.
இயக்குநர் ராஜா கருப்பசாமி பேசுகையில், “என் கதையை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கருப்புசாமி அண்ணனுக்கும், என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் என்பது மிகுந்த மகிழ்ச்சி. அனிஷ்மா திறமையான நடிகை.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கதையை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தேடியபோது, பலரும் ரிஷிகாந்தை மாற்ற வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் தற்போது தமிழ் சினிமாவிற்கு கொள்கையுடனும் சமூகப் பொறுப்புடனும் ஒரு ஹீரோ கிடைத்திருக்கிறார். என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி. சின்ன படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு தேவை. அந்த ஆதரவுதான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்” என்றார்.
நடிகர் பகவதி பெருமாள் பேசுகையில், “சினிமாவில் 100 பேர் ஜெயித்தால் லட்சம் பேர் காணாமல் போகிறார்கள். இதுபோன்ற நல்ல படங்கள் வெளியாகி வெற்றி பெற தயாரிப்பாளர்கள்தான் முக்கிய காரணம். அந்த வகையில், இந்தக் கதையை தேர்ந்தெடுத்து தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. பலருடைய வாழ்க்கையில் இந்தப் படம் ஒளியேற்றியுள்ளது. சிறிய பட்ஜெட்டில் படம் உருவாக்குபவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து தற்போது பல நல்ல படங்கள் வெளியாகி வருகின்றன. அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் தேவை” என்றார்.
நடிகர் ரிஷிகாந்த் பேசுகையில், “உங்கள் வீட்டு பையனாக நினைத்து எனக்கும் இந்தப் படத்திற்கும் ஆதரவு அளித்த ஊடகத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ஆறு ஆண்டுகளாக இந்தப் படத்தை நானும் தம்பி ராஜாவும் சுமந்து கொண்டிருந்தோம். எங்களை நம்பி வாய்ப்பு வழங்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி.
குடும்பத்தோடு அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து சிரித்து மகிழும்படியான ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். அது இன்று நடந்திருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமான படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.
படத்தின் வெற்றியை தொடர்ந்து நடைபெற்ற இந்த நன்றி தெரிவிக்கும் விழாவில், படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியையும், ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு நன்றியையும் பகிர்ந்து கொண்டனர்.









