தூய்மையான அரசியல்… தனித்துவமான திரைப்பயணம் – ஆர்.எம்.வீரப்பன் நூற்றாண்டு விழா

7

தமிழக அரசியலிலும் தமிழ் திரையுலகிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் பயணம், திரைத்துறைப் பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட பண்புகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.

பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கியபோது அவருடன் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு முன்னாள் முதல்வர்களின் அமைச்சரவைகளிலும் இடம்பெற்ற இவர், 1977 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் ஐந்து முறை தமிழக அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். மேலும், மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசியலுடன் இணைந்து திரைத்துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த ஆர்.எம்.வீரப்பன், தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். 20-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதிய இவர், திரையுலகில் ‘திரைக்கதை சித்தர்’ என அன்புடன் அழைக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘ரிக்ஷாக்காரன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘தெய்வத் தாய்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்து அவரது திரைப்பயணத்தில் முக்கியப் பங்காற்றிய ஆர்.எம்.வீரப்பன், பின்னர் ரஜினிகாந்த் நடித்த ‘மூன்று முகம்’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களையும் வழங்கினார். இதன் மூலம் தமிழ் சினிமாவின் பல்வேறு தலைமுறைகளிலும் தனது தயாரிப்புகளால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார்.

ஆர்.எம்.வீரப்பனின் மருமகனான டி.ஜி.தியாகராஜன், முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராகத் தொடர்ந்து திரைத்துறையில் பயணித்து வருகிறார். எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களைத் தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ், வணிக வெற்றியுடன் தரமான படைப்புகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், ஆர்.எம்.வீரப்பன் உருவாக்கிய திரைத்துறை பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையவராக டி.ஜி.தியாகராஜனும் தனது தயாரிப்புப் பயணத்தை முன்னெடுத்து வருகிறார்.

இந்த நூற்றாண்டு விழாவை டி.ஜி.தியாகராஜன் முன்னின்று ஒருங்கிணைத்தார். விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பிரபலங்களை வரவேற்று அவர் உரையாற்றினார். ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் வாழ்க்கை, திரைத்துறைப் பங்களிப்பு, தனிப்பட்ட பண்புகள் மற்றும் வாழ்க்கை நெறிகளை நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது.

விழாவில் சென்னை கம்பன் கழகத் தலைவரும் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் பேசுகையில், அரசியலில் ஆர்.எம்.வீரப்பன் போன்ற தூய்மையான மனிதரைப் பார்ப்பது அரிது என்றும், மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் சண்முகம் பேசும்போது, ஆர்.எம்.வீரப்பனுக்கு ‘அரசியல் சாணக்கியர்’ என்ற பெயர் இருந்தாலும், அதைக் கடந்து ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார் பேசுகையில், தியாகம், அன்பு, தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறை உணர வேண்டும் என்றும், இந்த பண்புகளில் சிறந்து விளங்கியவர் ஆர்.எம்.வீரப்பன் என்றும் குறிப்பிட்டார். மேலும், ஆர்.எம்.வீரப்பன் வாழ்ந்த சாலைக்கு தமிழக அரசு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், “அரசியலையும் நாகரிகமாக நடத்தியவர் ஆர்.எம்.வீ. அவரைப் போன்ற அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும் என்பதே இவ்விழாவின் நோக்கம்” என்றார்.

விழாவில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் முத்துலிங்கம், எம்.ஜி.ஆர். கழக பொதுச்செயலாளர் ராமலிங்கம், இயக்குநர் பி.வாசு, முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் சண்முகம், சென்னை கம்பன் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அரசியலில் தூய்மை, நாகரிகம், தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்தியதுடன், திரைத்துறையில் பல வெற்றிப் படைப்புகளை வழங்கிய ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, அவரது நினைவுகளைப் போற்றும் நிகழ்வாக மட்டுமின்றி, அவரது வாழ்க்கை மதிப்புகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வாகவும் அமைந்தது.