விக்ரமின் அடுத்த படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ – மாஸ் ஆக்‌ஷனுடன் வெளியான டைட்டில் வீடியோ!

7

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிகப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, அட்டகாசமான வீடியோ ஒன்றின் மூலம் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன்பு விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘இருமுகன்’ திரைப்படம் வெளியாகியிருந்த நிலையில், சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘பவர்ஹவுஸ்’ தலைப்பு அறிவிப்பு வீடியோ, ஒரு அழகான குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் வகையில் தொடங்குகிறது. கல்யாண ஆர்டருக்காக சமையல் நடைபெறும் வீட்டிற்குள் விக்ரம் நுழைவதிலிருந்து காட்சிகள் நகர்கின்றன. தொடர்ந்து அந்த வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். சம்யுக்தா ஹெக்டே, வி.டி.வி. கணேஷ், ஊர்வசி உள்ளிட்டோர் இடம்பெறும் இந்தக் காட்சிகள், அமைதியான மற்றும் மகிழ்ச்சியான குடும்பச் சூழலை வெளிப்படுத்துகின்றன.

ஆனால், அடுத்த சில நொடிகளில் வீடியோவின் களம் முற்றிலும் மாறுகிறது. குடும்பப் பின்னணியில் இருந்து அதிரடியான ஆக்‌ஷன் உலகிற்குள் காட்சிகள் பயணிக்கின்றன. விக்ரம் பூட்டிய அறை ஒன்றைத் திறந்து உள்ளே செல்வதும், அங்கு அடிபட்டு கிடக்கும் அடியாட்களுடன் அவர் பேசும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. இதன் மூலம் ‘பவர்ஹவுஸ்’ என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில் விக்ரமின் கதாபாத்திரத்தின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

குடும்ப உணர்வுகளுடன் கமர்ஷியல் ஆக்‌ஷன் அம்சங்களும் இணைந்த திரைப்படமாக ‘பவர்ஹவுஸ்’ உருவாகி வருகிறது. விக்ரமின் மாஸ் திரைமுகத்துடன் குடும்ப சென்டிமென்ட், பரபரப்பான திரைக்கதை மற்றும் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம்பெறும் படமாக இது உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம், விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்ஆகியோர் தயாரிக்கின்றனர். ஜி. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்கிறார். ஷான் கருப்புசாமி வசனங்களை எழுதுகிறார். ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். பிருந்தா நடன அமைப்பை மேற்கொள்கிறார். ரேமண்ட் டெரிக் கிராஸ்டா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

மேலும், சூர்யா ராஜீவன் கலை இயக்குநராகவும், பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பாளராகவும், கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பாளராகவும், தேனி முருகன் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றுகின்றனர்.

குடும்பப் பின்னணியில் தொடங்கி அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளாக மாறும் தலைப்பு அறிவிப்பு வீடியோவும், ‘பவர்ஹவுஸ்’ என்ற தலைப்பும் சீயான் விக்ரமின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.