“காஞ்சனா கதாபாத்திரம் எனக்கு கண்ணீரை வரவழைத்தது” – ‘என்ன விலை’ குறித்து நிமிஷா சஜயன்!

6

மாறுபட்ட கதைக்களங்களையும், நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் நடிகை நிமிஷா சஜயன், தற்போது ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை சந்திக்கிறார். சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் குறித்து நிமிஷா சஜயன் பகிர்ந்துள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

‘என்ன விலை’ திரைப்படத்திற்காக இயக்குநர் சஜீவ் பழூர் கதையை முதலில் கூறியபோது, தன்னுடைய கதாபாத்திரம் எது என்பதை அவர் தெரிவிக்கவில்லை என நிமிஷா சஜயன் தெரிவித்துள்ளார். கதையில் இடம்பெறும் இரண்டு கதாபாத்திரங்களுமே வலுவாகவும் அழகாகவும் எழுதப்பட்டிருந்ததால், எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பு தனக்குள் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து நிமிஷா சஜயன் கூறுகையில், “சஜீவ் என்னிடம் கதையைச் சொன்னபோது, எனக்காக எந்தக் கதாபாத்திரத்தை மனதில் வைத்திருக்கிறார் என்பதை அவர் சொல்லவில்லை. இரண்டு கதாபாத்திரங்களுமே மிகவும் அழகாக எழுதப்பட்டிருந்தன. அதனால், விஜயலட்சுமி அல்லது காஞ்சனா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேனா என்ற ஆர்வம் இருந்தது. எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டிருப்பேன்” என்றார்.

தொடர்ந்து, காஞ்சனா கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருப்பதாக இயக்குநர் சஜீவ் பழூர் தெரிவித்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும் நிமிஷா பகிர்ந்துள்ளார். “காஞ்சனா கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால், அந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிக்கப் போவதாக சஜீவ் சொன்னபோது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. இரண்டு கதாபாத்திரங்களுமே மிகவும் அழகாகவும் வலுவாகவும் எழுதப்பட்டிருந்ததால், அவர் எந்தக் கதாபாத்திரத்தை எனக்கு தரப் போகிறார் என்பது தெரியவில்லை. ‘அது உங்களுக்கான கதாபாத்திரம்’ என்று அவர் சொன்ன அந்த நொடி மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணமாக அமைந்தது” என தெரிவித்துள்ளார்.

‘என்ன விலை’ திரைப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஆழமான உணர்வுப்பூர்வமான பயணம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள நிமிஷா, நடிகர் கருணாஸின் நடிப்பையும் பாராட்டியுள்ளார். “கருணாஸ் சாருடன் எனக்கு அதிகமான காட்சிகள் இல்லை. ஆனால், அவரது நடிப்பு அசாத்தியமானது. விஜயலட்சுமி கதாபாத்திரமும் மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவரும் சிறப்பாக நடித்துள்ளார்” என்றார்.

மேலும், படத்தின் முன்னோட்டக் காட்சிகள் மற்றும் பத்திரிகையாளர் திரையிடல்களில் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், கதாபாத்திரங்களை உயிரோட்டமாக உருவாக்கியதற்கான பெருமை இயக்குநர் சஜீவ் பழூரையே சேரும் என்றும் நிமிஷா சஜயன் தெரிவித்துள்ளார். “‘என்ன விலை’ திரைப்படம் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நினைவில் நிற்கும் படமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’, ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. வாழ்வாதாரம் மற்றும் கண்ணியத்திற்காக அவர் நடத்தும் போராட்டம், பின்னர் முக்கியமான சட்டப் போராட்டமாக மாறுகிறது.

இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகுமார், விஜயலட்சுமி வீரமணி, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை கலாமயா ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்க, ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.