செஸ் காய்களுக்கு பின்னால் ஒரு தாயின் போராட்டம் – ‘தி கிராண்ட் மாஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்!

6

V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. மாறுபட்ட சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது முதல் படைப்பிலேயே சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளை நோக்கிய போராட்டத்தையும் மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியுள்ளார்.

வாழ்வாதாரத்திற்காக தூய்மை பணியாளராகப் போராடும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக வேண்டும் என்ற கனவுக்கு துணை நிற்கிறார். வறுமை, சமூகத் தடைகள் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், தனது மகனின் கனவை நனவாக்க அந்தத் தாய் மேற்கொள்ளும் போராட்டமே இப்படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது.

வழக்கமான கமர்ஷியல் கதைக்களத்திலிருந்து விலகி, சமூகத்தின் மற்றொரு பக்கத்தையும், ஒரு தாயின் கனவு மற்றும் தியாகத்தையும் அழுத்தமாகப் பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சதுரங்க கட்டங்கள் நிறைந்த பின்னணியில் தாயும் மகனும் வெவ்வேறு உணர்வுகளுடன் இடம்பெற்றுள்ளனர். செஸ் காயை கையில் ஏந்தியபடி சிறுவன் நம்பிக்கையுடன் மேல்நோக்கிப் பார்க்க, மறுபுறம் தாய் கவலையும் வலியும் கலந்த பார்வையுடன் காட்சியளிக்கிறார். அவர்களைச் சுற்றிலும் நகரும் செஸ் காய்களும், கீழ்ப்பகுதியில் தாய் தனது மகனுடன் சைக்கிளில் பயணிக்கும் காட்சியும், அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தையும் கனவையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.

இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு அர்ஜுன் ரவி – ஞானசேகர் ஆர்.எஸ். இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். தினேஷ் ஆண்டனி இசையமைக்க, ரஞ்சீத் சி.கே. படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராகவன் சஞ்சீவி கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.

திண்டுக்கல், மதுரை, தடா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.