சசிகுமாருக்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’… சமுத்திரக்கனிக்கு ‘காந்தா’ – SIIMA-வில் இருவருக்கும் விருது!

6

SIIMA 2026 விருது விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்களான சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி விருதுகளை வென்று கவனம் ஈர்த்துள்ளனர். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார்.

நட்பிலும், திரைப்பயணத்திலும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் சசிகுமாரும் சமுத்திரக்கனியும், ஒரே விருது விழாவில் தங்களது படைப்புகளுக்காக அங்கீகாரம் பெற்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் சமுத்திரக்கனி, இயல்பான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். ‘காந்தா’ திரைப்படத்திலும் அவரது நடிப்பு கவனம் பெற்ற நிலையில், அதற்காக SIIMA விருது கிடைத்துள்ளது.

கதாபாத்திரங்களை வெறுமனே நடித்துக் காட்டாமல், அதன் உணர்வுகளையும் தன்மையையும் உள்வாங்கி இயல்பாக வெளிப்படுத்துவது சமுத்திரக்கனியின் நடிப்பின் தனிச்சிறப்பாக இருந்து வருகிறது. பல்வேறு மொழிகளிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் அவர், இந்த அங்கீகாரத்தின் மூலம் தனது திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான விருதைச் சேர்த்துள்ளார்.

இந்த விருதை வழங்கிய SIIMA குழுவினருக்கும், நடுவர் குழுவினருக்கும் சமுத்திரக்கனி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், ‘காந்தா’ படத்தின் இயக்குநர் செல்வமணி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தற்போது பல்வேறு மொழிகளில் உருவாகி வரும் படங்களில் சமுத்திரக்கனி தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’, முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’, பூஜா அபர்ணா கொல்லூரு இயக்கத்தில் அக்ஷய் கண்ணா நடிக்கும் ‘மகாகாளி’, மஞ்சு மனோஜ் உடன் டேவிட் ரெட்டி மற்றும் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘NBK 111’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.

மேலும், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதேபோல், பிரசாந்த் வர்மாவின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகி வரும் ‘மகாகாளி’ திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே, சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் ‘School Bus’ திரைப்படத்தில் சசிகுமார், கிச்சா சுதீப் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கன்னடம் மற்றும் தெலுங்கில் இப்படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தமிழிலும் ‘School Bus’ திரைப்படம் குறித்த பிரம்மாண்டமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே விருது விழாவில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் தங்களது படைப்புகளுக்காக அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், அவர்களது அடுத்த கூட்டணியான ‘School Bus’ மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.