கெமிஸ்ட்ரியா… கம்பாட்டிபிலிட்டியா? காதலுக்கு பந்தயம் வைக்கும் புதிய தமிழ் வெப் சீரிஸ்!
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் காதலும் உறவுகளும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. நேரில் சந்தித்து காதல் வளர்ந்த காலம் மாறி, டேட்டிங் ஆப்கள் மூலம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. ஸ்வைப், மேட்ச், மெசேஜ் என காதலின் தொடக்கமே டிஜிட்டல் உலகில் இருந்து வரும் நிலையில், நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘#Love’. இந்தத் தொடர் அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள இந்தத் தொடரை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், இருவருக்கும் இடையிலான உறவும் கெமிஸ்ட்ரியும் தொடரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
‘FOUND’ மற்றும் ‘Find My Bae’ எனும் இரண்டு போட்டி டேட்டிங் ஆப்களைச் சுற்றி ‘#Love’ தொடரின் கதை நகர்கிறது. மற்றவர்களுக்கான சரியான துணையைத் தேடிக் கொடுப்பதையே தங்களது தொழிலாகக் கொண்டிருக்கும் இந்த இரண்டு ஆப்களின் நிறுவனர்களான தாரா மற்றும் மேத்யூ, தங்களுக்கான காதலை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர்.
இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி, காதல், நட்பு, குடும்பம், லட்சியம் மற்றும் உறவுகள் என பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு கதை பயணிக்கிறது. இன்றைய தலைமுறையின் காதல் மற்றும் உறவுகளை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்யும் வகையில் இந்தத் தொடர் உருவாகியுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கத் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில், தென்னிந்தியக் கதைகளுக்கான நெட்ஃப்ளிக்ஸின் கவனம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், தமிழில் சமகாலக் கதைகளின் வரிசையை விரிவுபடுத்தி வரும் நிலையில் ‘#Love’ புதிய அணுகுமுறையுடன் உருவாகியுள்ள காதல் நகைச்சுவைத் தொடராக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு போட்டி டேட்டிங் ஆப் நிறுவனர்கள் காதல் குறித்த தங்களது எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் ஒருவரை ஒருவர் சந்திப்பதன் மூலம் சோதித்துப் பார்க்கும் விதத்தில் கதை அமைந்திருப்பதாகவும், பாலாஜி மோகனின் இயக்கமும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஷோ-ரன்னர் மற்றும் தயாரிப்புப் பணியும் தொடருக்கு தனித்துவமான அணுகுமுறையை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘#Love’ குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் உறவுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை இயல்பாகச் சொல்வதோடு, அதன் உணர்வுகளையும் அன்பையும் விட்டுவிடாமல் கதை சொல்லியிருப்பதே தொடரின் மீது தன்னை ஈர்த்ததாகத் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் உருவாக்கியுள்ள கதாபாத்திரங்கள் லட்சியங்களையும் குறைகளையும் கொண்டவர்களாக இருப்பதால், பார்வையாளர்கள் அவர்களுடன் எளிதாகத் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் பாலாஜி மோகன் கூறுகையில், இன்றைய காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்பதே ‘#Love’ உருவானதற்கான முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ளார். காதலும் ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும் விதமும் மாறியிருந்தாலும், உறவுகளுக்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகள் என்றும் மாறுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தத் தொடர் காதலை மட்டுமின்றி நட்பு, குடும்பம், லட்சியம் மற்றும் தன்னைப் பற்றிய புரிதலை வளர்த்துக்கொள்ளும் பயணத்தையும் பதிவு செய்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
‘#Love’ தொடரை நிர்மல் வில்லியம்ஸ் எழுதியுள்ளார். ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். May6 Entertainment Factory நிறுவனம் தொடரைத் தயாரித்துள்ளது.
காதலில் முக்கியமானது கெமிஸ்ட்ரியா… அல்லது கம்பாட்டிபிலிட்டியா? அதற்கான பதிலை நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டுள்ள ‘#Love’ தொடரில் பார்க்கலாம்.
‘#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்!
