துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஆகாசம்லோ ஓக தாரா’ (AOT) திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பவன் சாதினேனி இயக்கியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குண்ணம் மற்றும் ரம்யா குண்ணம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் வழங்குகின்றன.
வெளியீட்டுத் தேதியுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் படக்குழு தீவிர புரமோஷன் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் முதல் பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகும் போதும் ‘AOT’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. துல்கர் சல்மான் தொடர்ந்து வித்தியாசமான மற்றும் அர்த்தமுள்ள கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருவதுடன், இயக்குநர் பவன் சாதினேனியின் தனித்துவமான படைப்பாற்றலும் இணைந்துள்ளதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
‘AOT’ திரைப்படத்திற்கு திறமையான தொழில்நுட்பக் குழுவும் அமைந்துள்ளது. ஒளிப்பதிவை சுஜித் சாரங் மேற்கொண்டுள்ள நிலையில், ஸ்வேதா சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனித்துள்ளார். கங்கராஜு குன்னம் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
வலுவான நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகியுள்ள ‘AOT’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதன் மூலம் பல்வேறு மொழி ரசிகர்களையும் திரையரங்குகளில் சென்றடைய படக்குழு திட்டமிட்டுள்ளது.
