பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு புதிய போஸ்டர் மற்றும் ‘குஜிலிமஸ்து’ (Gujilimasthu) வீடியோவுடன் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.
‘ராவடி’ திரைப்படம் வரும் டிசம்பர் 24, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் மற்றும் ‘குஜிலிமஸ்து’ வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
படக்குழு வெளியிட்டுள்ள ‘குஜிலிமஸ்து’ வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஃபார்ட்டி கொண்டாட்டத்துடன் தொடங்கும் இந்த வீடியோ, ‘அராஜகம் பத்தல பத்தல’ பாடலுடன் காதல், கல்லூரி, அடிதடி, கொண்டாட்டம் என பல்வேறு தருணங்களை அடுத்தடுத்து காட்சிப்படுத்துகிறது. இதில் பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இருவரும் வெவ்வேறு பரிமாணங்களில் தோன்றுவது படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.
இளமை துள்ளலுடன் கூடிய நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமாக ‘ராவடி’ உருவாகியுள்ளது. கலகலப்பான சம்பவங்கள், நகைச்சுவை நிறைந்த காட்சிகள் மற்றும் இளைஞர்களின் ரசனைக்கேற்ற திரைக்கதை என முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒகேனக்கல்லின் இயற்கை அழகை பின்னணியாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் படத்திற்கு தனித்துவமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமாருடன் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, பரத் விக்ரமன்படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனித்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S. S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முன்னதாக வெளியான ‘ராவடி’ படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘குஜிலிமஸ்து’ வீடியோவும், டிசம்பர் 24-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
