சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படமான ‘ஹாஃப்’ (HALF), புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) ‘Midnight Madness’ பிரிவில் திரையிடப்பட்ட முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ஃபிராக்ரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் ஆன் சஜீவ் மற்றும் பி.கே. சஜீவ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், அதன் தீவிரமான கதைக்களம், தனித்துவமான காட்சி மொழி மற்றும் வித்தியாசமான உருவாக்கத்தால் சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டொராண்டோ திரைப்பட விழாவில் ‘Midnight Madness’ பிரிவில் நடைபெற்ற ‘ஹாஃப்’ படத்தின் திரையிடலுக்கு பார்வையாளர்களிடையே உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் பல பரபரப்பான தருணங்களில் திரையரங்கில் கைதட்டல்கள் எழுந்ததுடன், திரையிடல் நிறைவடைந்த பின்னரும் பார்வையாளர்களின் உற்சாகம் தொடர்ந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
திரையிடலைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் இயக்குநர் சம்ஜாத் பி.எஸ்., தயாரிப்பாளர்கள் ஆன் சஜீவ், பி.கே. சஜீவ், முதன்மை நடிகர்கள் ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ், இசையமைப்பாளர் மிதுன் முகுந்தன்மற்றும் ஒலி வடிவமைப்பாளர் விஷ்ணு கோவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் படத்தின் கரு, உருவாக்கம், காட்சி மொழி, இசை, ஒலி வடிவமைப்பு மற்றும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்து படக்குழுவினர் பார்வையாளர்களுடன் உரையாடினர். படத்தின் உருவாக்கப் பின்னணி குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர்.
‘ஹாஃப்’ படத்தின் சண்டைக் காட்சிகளும் சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. வெரி ட்ரை யூலிஸ்மேன் அமைத்துள்ள சண்டைக் காட்சிகள் படத்தின் பரபரப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன.
தொழில்நுட்ப ரீதியாகவும் படம் தனித்துவமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. பப்பீனுவின் ஒளிப்பதிவு, மகேஷ் புவனெந்தின் படத்தொகுப்பு, மிதுன் முகுந்தனின் இசை மற்றும் விஷ்ணு கோவிந்தின் ஒலி வடிவமைப்பு ஆகியவை படத்தின் தீவிரமான சூழலையும் பதற்றத்தையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ரஞ்சித் சஜீவ் மற்றும் ஐஸ்வர்யா ராஜ் ஆகியோரின் நடிப்பும் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் படத்தின் தீவிரமான உலகத்தையும் தங்களது நடிப்பின் மூலம் இருவரும் வெளிப்படுத்தியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
‘ஹாஃப்’ திரைப்படத்தின் சர்வதேச பயணத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், Excel Entertainment மற்றும் AA Films இணைந்து இப்படத்தை வடஇந்தியாவில் வழங்கி விநியோகிக்கின்றன. மேலும், படத்தின் சர்வதேச விற்பனை உரிமையை ஐரோப்பாவைச் சேர்ந்த Best Friend Forever (BFF) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மலையாள சினிமாவின் திரைப்படம் ஒன்று முதன்முறையாக TIFF-ன் மதிப்புமிக்க ‘Midnight Madness’ பிரிவில் இடம்பெற்றிருப்பது ‘ஹாஃப்’ படத்தின் சர்வதேச பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. டொராண்டோவில் கிடைத்துள்ள இந்த வரவேற்பின் மூலம், சர்வதேச திரைப்பட விழா தளத்தில் மலையாள சினிமாவின் தனித்துவமான குரலை மேலும் பரவலாக கொண்டு செல்லும் வாய்ப்பை ‘ஹாஃப்’ பெற்றுள்ளது.
‘Midnight Madness’ திரையிடலில் கிடைத்துள்ள உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஹாஃப்’ திரைப்படத்தின் சர்வதேச பயணம் புதிய எதிர்பார்ப்புடன் தொடர்கிறது.

