காதல், சிக்கல்கள் மற்றும் நவீன உறவுகள்… செப்டம்பர் 25 முதல் ZEE5-ல் வெளியாகும் நயன்தாரா – கவினின் ‘Hi’!

7

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ZEE5, தொடர்ந்து பல்வேறு மொழிகளில் வெளியாகும் கவனம் பெற்ற திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு வருகிறது. அந்த வரிசையில், நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்துள்ள ‘Hi’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25, 2026 முதல் தமிழ் ZEE5-ல் பிரத்யேகமாக வெளியாகிறது.

வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்டு, நவீன உறவுகள், காதல், நிராகரிப்பு, குடும்ப அழுத்தங்கள் மற்றும் அவற்றுக்கு இடையில் உருவாகும் உணர்வுப்பூர்வமான சிக்கல்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இளம் தலைமுறையினரின் உறவுகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் அச்சங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் இதமான கதை சொல்லல் மூலம் பதிவு செய்யும் வகையில் ‘Hi’ உருவாகியுள்ளது.

விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா மற்றும் கவின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதலில் ஏற்படும் ஏமாற்றங்கள் மற்றும் நிராகரிப்புகளுக்குப் பிறகும் காதலைத் தேடும் ஓர் இளைஞனையும், குடும்பச் சவால்களுக்கு மத்தியில் விருப்பமில்லாத திருமணத்திலிருந்து தப்பிக்க முயலும் ஓர் இளம் பெண்ணையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.

இருவரும் எதிர்பாராத விதமாக சந்திக்கும் நிலையில், அந்தச் சந்திப்பு அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஏற்றுக்கொள்ளுதல், காதல் மற்றும் தன்னைத் தானே அறிதல் ஆகியவற்றை நோக்கிய அவர்களது பயணமே படத்தின் மையமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் நயன்தாரா சுயாதீனமான, மன உறுதி கொண்ட பெண்ணாக நடித்துள்ளார். தனது கொள்கைகளில் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில், தனக்குள் இருக்கும் அச்சங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான சிக்கல்களையும் எதிர்கொள்ளும் கதாபாத்திரமாக அவரது பாத்திரம் அமைந்துள்ளது. மறுபுறம், கவின் தனது உணர்வுகளை மறைக்காமல் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளும் இளைஞராக நடித்துள்ளார். காதல், நிராகரிப்பு, தன்னம்பிக்கையின்மை மற்றும் ஒரு உறவைத் தேடும் மனநிலை ஆகியவற்றை எதிர்கொள்ளும் கதாபாத்திரமாக அவரது பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிப்பது இப்படத்தின் முக்கியமான எதிர்பார்ப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இருவரின் மாறுபட்ட நடிப்பு பாணியும் கதாபாத்திரங்களுக்கிடையேயான உறவும் படத்திற்கு தனித்துவமான ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ் திரையுலகின் மூத்த கலைஞர்களான ராதிகா சரத்குமார், மறைந்த நடிகர் கே. பாக்யராஜ் மற்றும் பிரபுஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் பங்களிப்பு படத்தின் உணர்வுப்பூர்வமான அம்சங்களுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, புகழ்பெற்ற இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் இறுதிக்காலத் திரைத் தோற்றங்களில் ஒன்றாக ‘Hi’ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இசையை ஜென் மார்ட்டின் அமைத்துள்ளார். அவரது இசையும் பின்னணி இசையும் கதையின் உணர்வுகளுக்கு முக்கிய பங்களிப்பை வழங்குவதாக கவின் தெரிவித்துள்ளார். குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரசகுல்லா’ பாடல் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ZEE5 நிறுவனத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளுக்கான பிசினஸ் ஹெட் லாயிட் சி. சேவியர், ‘Hi’ திரைப்படம் நவீன உறவுகளை உண்மைத்தன்மையுடனும் நகைச்சுவையுடனும் அணுகுவதுடன், அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். நயன்தாரா மற்றும் கவின் இணைந்துள்ள இப்படம் ZEE5-ன் திரைப்படத் தொகுப்பில் முக்கியமான இணைப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாரா பேசுகையில், தன்னுடைய கதாபாத்திரம் வலிமையானதும் சுயாதீனமானதுமாக இருந்தாலும், அதற்குள் இருக்கும் அச்சங்களும் உணர்வுப்பூர்வமான சிக்கல்களும் அந்தப் பாத்திரத்தை தனக்கு அர்த்தமுள்ளதாக மாற்றியதாக தெரிவித்துள்ளார். இன்றைய உலகில் காதலைப் பற்றிய எளிதில் தொடர்புகொள்ளக்கூடிய கதையை ‘Hi’ கொண்டிருப்பதாகவும், குடும்ப அழுத்தங்கள் மற்றும் உறவுகளில் ஏற்படும் உள்மனப் போராட்டங்களை இப்படம் பதிவு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கவின் கூறுகையில், தனது கதாபாத்திரம் உணர்வுகளை மறைக்காமல் வெளிப்படையாகப் பேசும் இளைஞனாக அமைந்திருப்பது தனக்கு மிகவும் பிடித்த அம்சம் என தெரிவித்துள்ளார். காதல், நிராகரிப்பு மற்றும் தன்னம்பிக்கையின்மை போன்ற உணர்வுகளைக் கடந்து செல்லும் இளைஞனின் பயணத்தை இப்படம் பேசுவதாகவும், இயக்குநர் விஷ்ணு எடவன் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை அழகாக சமநிலைப்படுத்தி படத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திரையரங்க வெளியீட்டைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘Hi’, காதல் மற்றும் நவீன உறவுகளின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ளது. நயன்தாரா – கவின் கூட்டணி, விஷ்ணு எடவனின் இயக்கம், மூத்த நட்சத்திரங்களின் பங்களிப்பு மற்றும் ஜென் மார்ட்டினின் இசை ஆகியவற்றுடன் இப்படம் தற்போது ஓடிடி வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.

‘Hi’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் 25, 2026 முதல் தமிழ் ZEE5-ல் பிரத்யேகமாகக் காணலாம்.