சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது.
சென்னையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் பேசும்போது, ‘#Love’ நெட்ஃப்ளிக்ஸின் முதல் தமிழ் காதல் டிராமா தொடராக உருவாகியுள்ளதாக தெரிவித்தார். தென்னிந்தியக் கதைகளில் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், குறிப்பாக தமிழ் படைப்புகளில் வித்தியாசமான கதைக்களங்கள் மற்றும் தனித்துவமான குரல்களை வழங்க விரும்புவதாகவும் கூறினார்.
‘#Love’ தொடரில் இரண்டு போட்டியாளர்களான டேட்டிங் ஆப் நிறுவனர்கள் இடம்பெறுகின்றனர். ஒருவர் காதல் என்பது காம்பாட்டிபிலிட்டியை அடிப்படையாகக் கொண்டது என நம்புகிறார்; மற்றொருவர் கெமிஸ்ட்ரிதான் முக்கியம் என்கிறார். தங்களது கருத்துதான் சரி என்பதை நிரூபிக்க இருவரும் போட்டியில் இறங்கும் நிலையில், எதிர்பாராத விதமாக காதல் அவர்களது வாழ்க்கையையே மாற்றுகிறது. இதன் மூலம் டேட்டிங் ஆப்கள் மட்டுமின்றி, காதல் குறித்த நம்முடைய எண்ணங்களையே காதல் எப்படி மாற்றுகிறது என்பதையும் இந்தத் தொடர் பேசுகிறது.
ஷோ-ரன்னரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது, ‘#Love’ தொடரை உருவாக்கும் வாய்ப்பை வழங்கிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். ஒரு தொடரின் ஆரம்பம் முதல் இறுதிக்கட்டம் வரை அதன் உருவாக்கத்தில் பல முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்ததாகவும், சரியான நேரத்தில் முடிவெடுப்பதன் முக்கியத்துவத்தை இந்தப் பயணம் தனக்கு கற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் தொடரின் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றுவது மிகப்பெரிய பொறுப்பு என்றும், இந்தத் தொடரை தாங்கள் நினைத்த இடத்திற்கு கொண்டு சேர்ப்பதே தங்களது நோக்கம் என்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
இயக்குநர் பாலாஜி மோகன் பேசும்போது, காதலை முழுமையாக யாராலும் புரிந்துகொள்ள முடியாது என்பதாலேயே தொடர்ந்து காதல் கதைகளை உருவாக்குவதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக தெரிவித்தார். நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளையும், பார்வையாளர்கள் தங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடிய அம்சங்களையும் இணைத்தே ‘#Love’ தொடரை உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.
“காதலைப் பற்றி எனக்கும் முழுமையாகத் தெரியாது. மற்ற அனைவரையும் போலவே நானும் அதை புரிந்துகொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் காதல் எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கிறது” என்ற அவரது கருத்து, தொடரின் மையக் கருவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
தொடரில் மேத்யூ கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ், தனது கதாபாத்திரத்தின் உணர்வுகள் மற்றும் பலவீனமான பக்கங்கள் தன்னை அதிகம் கவர்ந்ததாக தெரிவித்தார். அதேபோல், தாரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, தாராவுடன் தன்னை 80 சதவீதம் ஒப்பிட்டுப் பார்க்க முடியும் என்றும், அந்தக் கதாபாத்திரமாக நடிப்பது தனக்கு மிகவும் இயல்பாகவும் சுதந்திரமாகவும் இருந்ததாகவும் கூறினார்.
காதலில் கெமிஸ்ட்ரியா அல்லது காம்பாட்டிபிலிட்டியா முக்கியம் என்ற கேள்விக்கு இருவரும் தங்களது பார்வையைப் பகிர்ந்துகொண்டனர். நிஜ வாழ்க்கையில் உறவு நீடிக்க காம்பாட்டிபிலிட்டி முக்கியம் என அர்ஜுன் தாஸ் கூறிய நிலையில், கெமிஸ்ட்ரிதான் முதலில் உருவாகி அதன் மூலம் காம்பாட்டிபிலிட்டியை நோக்கி உறவு செல்லும் என ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்தார். இருவரின் கருத்துகளிலும் கெமிஸ்ட்ரியும் காம்பாட்டிபிலிட்டியும் உறவுகளில் முக்கிய பங்கு வகிப்பது வெளிப்பட்டது.
‘#Love’ தொடரின் கதை FOUND மற்றும் Find My Bae எனும் இரண்டு டேட்டிங் ஆப்களைச் சுற்றி நகர்கிறது. மற்றவர்களுக்கான சரியான துணையைத் தேடிக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இந்த இரண்டு நிறுவனங்களின் நிறுவனர்களான தாரா மற்றும் மேத்யூ, தங்களுக்கான காதலை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர். போட்டியாளர்களாக இருக்கும் இருவருக்கிடையே உருவாகும் காதல், உறவு மற்றும் கருத்து மோதல்களே தொடரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன.
இயக்குநர் பாலாஜி மோகன், ‘காதலில் சொதப்புவது எப்படி?’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’, ‘மாரி 2’ உள்ளிட்ட படங்களின் மூலம் காதல் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை நகைச்சுவையுடன் அணுகியவர். அந்த வரிசையில், டிஜிட்டல் தலைமுறையின் காதல் மற்றும் உறவுகளை மையமாக வைத்து ‘#Love’ தொடரை உருவாக்கியுள்ளார்.
இந்தத் தொடரை நிர்மல் வில்லியம்ஸ் எழுதியுள்ளார். ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, சாய் முத்துராமன் மற்றும் சிவா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். May6 Entertainment Factory நிறுவனம் தொடரைத் தயாரித்துள்ளது.
டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியின் திரை கெமிஸ்ட்ரி, பாலாஜி மோகனின் நவீன காதல் அணுகுமுறை மற்றும் கெமிஸ்ட்ரி, காம்பாட்டிபிலிட்டி ஆகிய இரண்டையும் மையமாகக் கொண்ட கதைக்களம் தொடரின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
காதல், நட்பு, குடும்பம், லட்சியம் மற்றும் நவீன உறவுகளின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் ‘#Love’ வெப் சீரிஸ் அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.






