“ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை” – ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!
அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா, எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் தயாரிப்பில், ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இப்படத்தை வழங்குகிறார்.
தமிழகத்தில் இப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற சிறப்பு ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா, ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, சக்திவேலன் உள்ளிட்ட படக்குழுவினரும், நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய விநியோகஸ்தர் சக்திவேலன், எஸ்.எஸ். ராஜமௌலியின் பெயருடன் வெளியாகும் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகிய பிறகு, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதாகவும் கூறினார். மேலும், இப்படத்தை 3D தொழில்நுட்பத்தில் வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும், எதிர்காலத்தில் 3D-யில் வெளியிடும் வாய்ப்பு இருந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா பேசும்போது, இது தங்களது நிறுவனத்தின் முதல் திரைப்படம் என்றும், நேர்மையான மற்றும் இனிமையான படமாக உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். ராஜமௌலி வழங்குகிறார் என்பதைக் கடந்து, படத்தில் இடம்பெறும் உணர்ச்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும், குறிப்பாக இரண்டாம் பாதியில் இடம்பெறும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் கூறினார். ஃபஹத் பாசில் மற்றும் குழந்தை நட்சத்திரம் சாரா சச்தேவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி, ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் டிரெய்லர் பணியின் மூலம் ராஜமௌலி மற்றும் கார்த்திகேயாவுடன் தனது பயணம் தொடங்கியதாக தெரிவித்தார். ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் திரைக்கதை, இயக்குநரின் பார்வை, ஒளிப்பதிவு மற்றும் ஃபஹத் பாசிலின் நடிப்பு ஆகியவை இணைந்து சிறப்பான திரை அனுபவத்தை உருவாக்கியுள்ளதாக கூறினார். தமிழ் ரசிகர்களுக்காக டப்பிங் படமாக மட்டும் இல்லாமல், பல நுணுக்கமான விஷயங்களையும் கவனத்தில் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குழந்தை நட்சத்திரம் சாரா சச்தேவ் பேசும்போது, இப்படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், சூரி கதாபாத்திரத்துடன் தனது கதாபாத்திரத்திற்கு இருக்கும் உறவு முக்கியமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். ரசிகர்களை ஒரு ஃபேண்டஸியான மேஜிக்கல் உலகிற்குள் அழைத்துச் செல்லும் இப்படத்தில் சாகசங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறிய அவர், அக்டோபர் 2-ம் தேதி குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வருமாறு ரசிகர்களை அழைத்தார்.
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி பேசும்போது, இப்படத்தின் முன்னோட்டத்திற்கு தமிழில் பின்னணி குரல் வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன், தெலுங்கில் குரல் வழங்கிய பாலகிருஷ்ணா, மலையாளத்தில் குரல் வழங்கிய மோகன்லால் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், ஷஷாங்க் யெலெட்டி தன்னை சந்தித்து கதை சொல்ல வந்தபோது, மூன்று மணி நேரம் கதை சொல்ல வேண்டாம் என்றும், ஐந்து நிமிடங்களில் கதையைச் சொல்ல முடியுமா என்றும் கேட்டதாக ராஜமௌலி தெரிவித்தார். அதற்கு ஷஷாங்க், ஐந்து நிமிடங்கள் கூட வேண்டாம், ஒரே ஒரு வாக்கியத்தில் கதையைச் சொல்கிறேன் என்று கூறி, “ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை” என்று கதையின் மையத்தைச் சொன்னதாகவும், அந்த ஒரு வரியே தன்னை கவர்ந்ததாகவும் கூறினார்.
ஃபஹத் பாசில் குறித்து பேசிய ராஜமௌலி, அவர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருவது தன்னை தொடர்ந்து ஆச்சரியப்படுத்துவதாக தெரிவித்தார். ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தில் சூரி கதாபாத்திரத்திற்கு ஃபஹத் பாசில் சிறப்பான உயிர் கொடுத்துள்ளதாகவும், படத்தின் முதல் பிரதியை இசை மற்றும் டப்பிங் இல்லாமல் பார்த்தபோதே தான் சிரித்தும் அழுதும் ரசித்ததாகவும் கூறினார்.
குழந்தை நட்சத்திரம் சாராவையும் பாராட்டிய ராஜமௌலி, சூரி கதாபாத்திரத்திற்கு திவ்யா சரியான போட்டியாக இருப்பார் என்றும், இருவருக்கும் இடையிலான காட்சிகள் மற்றும் நடிப்பு ரசிகர்களை கவரும் என்றும் தெரிவித்தார். இந்தப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக ரசிக்கக்கூடிய வகையில் உருவாகியுள்ளதாகவும், அக்டோபர் 2-ம் தேதி அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பேசும்போது, ஃபஹத் பாசில் தன்னை நேரில் அழைத்து நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். படத்தின் டிரெய்லர் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் கூறினார்.
நடிகர் ஃபஹத் பாசில் பேசும்போது, இப்படத்தின் கதையை கேட்டவுடன் உடனடியாக நடிக்க சம்மதித்ததாக தெரிவித்தார். தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா இரண்டு கதைகளை கூறியதாகவும், இரண்டுமே பிடித்ததால் இரண்டிலும் நடிக்க விரும்பியதாகவும் குறிப்பிட்டார். பின்னர் இந்தப் படத்தை ராஜமௌலி வழங்குகிறார் என்பதை அறிந்தபோது மேலும் மகிழ்ச்சி ஏற்பட்டதாகவும் கூறினார்.
தெலுங்கில் தனக்கு இதுவரை கிடைக்காத ஒரு சிறப்பான தொடக்கத்தை இந்தப் படம் வழங்கும் என நம்புவதாக தெரிவித்த ஃபஹத் பாசில், இதுவரை தான் கேட்டிராத வித்தியாசமான கதையாகவும், தான் நடித்திராத புதிய கதாபாத்திரமாகவும் இப்படம் அமைந்துள்ளதாக கூறினார். சுமார் 100 முதல் 120 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், படத்தை சமீபத்தில் பார்த்தபோது தானே வியந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், சாரா சச்தேவின் நடிப்பையும் ஃபஹத் பாசில் வெகுவாக பாராட்டினார். படப்பிடிப்பின்போது தனது வசனங்கள் மற்றும் நடிப்பு குறித்து சாரா பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகவும், தன்னுடன் மிகவும் அர்ப்பணிப்புடன் இணைந்து பணியாற்றிய சக நடிகைகளில் சாராவும் ஒருவர் என்றும் குறிப்பிட்டார். இருவரும் இணைந்து படத்தில் சிறப்பான மேஜிக்கை உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.
நடிகர் சூர்யா பேசும்போது, ஃபஹத் பாசில் – ராஜமௌலி – கார்த்திகேயா கூட்டணியில் இப்படியொரு திரைப்படம் உருவாகும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். “ஒரு பேயை கடத்திவிட்டால் என்ன ஆகும்?” என்ற வித்தியாசமான கற்பனையே படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும், அதனால் இப்படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
ஃபஹத் பாசிலை சகோதரர் என குறிப்பிட்ட சூர்யா, இருவருக்கும் இடையே நீண்ட காலமாக பல்வேறு உரையாடல்கள் மற்றும் நினைவுகள் இருப்பதாக தெரிவித்தார். ஃபஹத் பாசில் வழக்கமான நட்சத்திர பிம்பத்துக்குள் சிக்காமல், கதையும் கதாபாத்திரமும் சிறப்பாக இருக்கிறதா என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு படங்களைத் தேர்வு செய்பவர் என்றும் பாராட்டினார்.
மேலும், குழந்தை நட்சத்திரங்கள் இடம்பெறும் திரைப்படங்கள் அந்த உலகத்தை மேலும் உண்மையானதாக மாற்றும் என்றும், சாரா இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளதாகவும் சூர்யா குறிப்பிட்டார். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படங்கள் அதிகம் உருவாக வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் பகிர்ந்துகொண்டார்.
எஸ்.எஸ். ராஜமௌலி இந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றதற்காக பாராட்டிய சூர்யா, புதிய திறமைகள் மற்றும் வித்தியாசமான கதைகளுக்கு தொடர்ந்து அவர் அளித்து வரும் ஆதரவை குறிப்பிட்டார். வழக்கமான திரைப்படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தை வழங்கியிருப்பதற்காகவும் ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்தார்.
ஃபஹத் பாசில், சாரா சச்தேவ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படத்திற்கு ஷஷாங்க் யெலெட்டி இயக்குநராக பணியாற்றியுள்ளார். பிராட் பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்ய, சந்தீப் மோகன் தயாரிப்பு வடிவமைப்பையும், கால பைரவா இசையையும் கவனித்துள்ளனர். பிரவீண் ஆண்டனி படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.
ஒரு மனிதன் பேயைக் கடத்திச் செல்வதை மையமாகக் கொண்ட வித்தியாசமான கற்பனை உலகத்தையும், சாகசம், நகைச்சுவை மற்றும் உணர்வுகளையும் இணைத்து உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.







