“‘டோரதி’க்கு கிடைக்கும் பாராட்டுகள் முழுமையாக தகுதியானவை” – கீர்த்தி சுரேஷ்

6

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ் ஏற்றுள்ள கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், படத்திற்கான திரையரங்குகள் மற்றும் காட்சிகளின் எண்ணிக்கையும் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது.

கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் ‘மகாநதி’ திரைப்படம் முக்கியமான படமாக அமைந்த நிலையில், ‘டோரதி’ திரைப்படமும் தனது மனதிற்கு நெருக்கமான படமாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், “விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை திரைப்படமாக்கி, அதனை வணிக ரீதியாகவும் வெற்றி பெறச் செய்வது மிகவும் கடினம். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் தனது எழுத்தின் மூலம் அதைச் சாத்தியமாக்கியுள்ளார். இந்தப் படத்தில் நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. அந்தக் கதாபாத்திரத்தில் பல அடுக்குகள் இருப்பதை என்னால் உணர முடிந்தது.

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை இயக்குநர் மிகவும் உணர்வுப்பூர்வமாக இந்தக் கதையின் மூலம் பேசியுள்ளார். பெண்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படையாகப் பேசுவதற்குத் தடையாக இருக்கும் ஆணாதிக்கம், சமத்துவத்திற்கான அவர்களின் மனவேதனை, தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான உரிமை ஆகியவை உணர்வுப்பூர்வமாக படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, புறச்சூழல் அழுத்தம் காரணமாகத் திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்கள் அனுபவிக்கும் வலியும் இப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், தன்னுடன் நடித்துள்ள ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோரின் நடிப்பையும் கீர்த்தி சுரேஷ் பாராட்டியுள்ளார்.

“என்னுடன் நடித்த ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகிய இருவரும் தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் முழு கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர். ஒரு நடிகர் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கும்போதுதான் அத்தகைய திறமையான நடிப்பு வெளிப்படும். அவர்களுக்கு கிடைத்து வரும் அனைத்து பாராட்டுகளுக்கும் அவர்கள் முழுமையாகத் தகுதியானவர்கள் என்று நான் மனதார நம்புகிறேன். அவர்கள் நிச்சயம் பெரிய உயரத்தை அடைவார்கள். இந்தக் கதையை தயாரிக்க துணிச்சலுடன் முன்வந்த தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கும் இப்படம், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சிவா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சரவணன் சந்திரன் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ள நிலையில், பவன் நரேந்திரா நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

வெளியானது முதல் பார்வையாளர்களிடையே நேர்மறையான வரவேற்பைப் பெற்று வரும் ‘டோரதி’, தொடர்ந்து திரையரங்குகளில் கவனம் ஈர்த்து வருகிறது.