வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஷிவ் பண்டிட், தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மீண்டும் உற்சாகமாக தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த ஷிவ் பண்டிட், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான ‘சிக்மா’ படத்தில் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வின்சென்ட் என்ற கிரே ஷேட் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், படத்தின் ஆக்ஷன்–அட்வெஞ்சர் ஹெய்ஸ்ட் கதைக்களத்திற்கு கூடுதல் பரிமாணத்தை வழங்கியுள்ளார்.
தனது திரைப்பயணம் குறித்து ஷிவ் பண்டிட் கூறுகையில், “கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். 2002ஆம் ஆண்டு முதன்முதலில் கேமரா முன்பு நின்றேன். ஆனால் நடிப்பு மீதான எனது பயணம் நான் ஒன்பது வயதாக இருந்தபோதே தொடங்கிவிட்டது. நாடகம், நடிப்புப் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் நடிப்பைக் கற்றுக்கொண்டேன்.
அதன்பிறகு மூன்று ஆண்டுகள் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றினேன். அந்த அனுபவம் குரல் ஏற்ற இறக்கம் மற்றும் தகவல் தொடர்பு குறித்து எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. நான் ஒருபோதும் மெயின்ஸ்ட்ரீம் நடிகராக வருவேன் என்று நினைத்ததில்லை. ஆனால், பிஜாய் நம்பியார் இயக்கத்தில், அனுராக் காஷ்யப் தயாரித்த ‘ஷைத்தான்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானேன். அந்தப் படத்திற்காக ஃபிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டேன்” என்றார்.
தமிழில் தனது முதல் படமாக அமைந்த ‘லீலை’ திரைப்படம் குறித்துப் பேசிய அவர், “பல ஆண்டுகளுக்குப் பிறகும் ‘லீலை’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இன்றும் அந்தத் திரைப்படத்திற்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிப்பது எனக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது” என்றார்.
‘சிக்மா’ படத்தில் வின்சென்ட் கதாபாத்திரம் கிடைத்தது குறித்துப் பேசிய ஷிவ் பண்டிட், “சமூக வலைதளங்களில் ‘லீலை’ மற்றும் நான் நடித்த மற்ற படங்கள் தொடர்பாக உருவாகியிருந்த கவனத்தை ஜேசன் சஞ்சய் கவனித்திருக்கிறார். ‘சிக்மா’ படத்தில் என்னை நடிக்க வைப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்று அவர் நினைத்துள்ளார். அப்படித்தான் கிரே ஷேட் கொண்ட வின்சென்ட் கதாபாத்திரம் என்னிடம் வந்தது.
ஒரு சூதாட்ட கிளப்பை நடத்தி வரும் வின்சென்ட், தனது நண்பர் எழில் மூலமாக சில சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான். இந்த சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் மிகவும் விரும்பி நடித்தேன். ‘சிக்மா’ விறுவிறுப்பான ஆக்ஷன் அட்வெஞ்சர் ஹெய்ஸ்ட் திரைப்படம். இதில் நடித்ததில் எனக்கு பெருமை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குநர் ஜேசன் சஞ்சயை பாராட்டிய ஷிவ் பண்டிட், “ஜேசன் இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்துள்ளார். அவர் ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, அற்புதமான மனிதரும் கூட. ஜேசன் இப்போது எனக்கு குடும்பத்தில் ஒருவரைப் போல ஆகிவிட்டார். வின்சென்ட் கதாபாத்திரத்தில் என்னை நம்பி நடிக்க வைத்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சந்தீப் கிஷன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருடனும் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது” என்றார்.
அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி, மகாலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ் மற்றும் கிரண் கொண்டா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சஞ்சீவ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.