ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் ஆன்மிகப் பயணம் திரையில் – ‘சாய் பாதானந்தா’

7

ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சாய் பாதானந்தா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு முன்னதாக பத்திரிகையாளர்களுக்காக படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன், இயக்குநர் சிறுத்தை சிவா, படக்குழுவினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

1906-ம் ஆண்டு திருச்சி அருகே உள்ள பொய்யாமணியில் பிறந்த ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி, இறைத் தேடலில் ஈடுபட்டு, தனது வாழ்நாளை ஆன்மிகப் பணிக்கும் மனித சேவைக்கும் அர்ப்பணித்தவர். ‘பொய்யாமணி செல்வர்’ எனப் போற்றப்பட்ட இவர், ஷீரடி சாய் பாபாவின் மீது கொண்ட பக்தியால் அவரது வழியில் ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டார். பெங்களூரு சாய் ஸ்பிரிச்சுவல் சென்டரின் Founder – Patron ஆகவும், மதராஸ் அகில இந்திய சாய் சமாஜத்தின் தலைவராகவும் பணியாற்றிய ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி, நிபந்தனையற்ற அன்பை தனது வாழ்வின் வழியாகப் போதித்தவர். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பெங்களூருவில் மகா சமாதி அடைந்தார்.

அவரது ஆன்மிகப் பயணத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள், சேவைப் பணிகள் மற்றும் குரு – சீடன் உறவை மையமாகக் கொண்டு ‘சாய் பாதானந்தா’ உருவாகியுள்ளது. ஒரு சிறந்த சாய் பக்தரின் வாழ்க்கையையும், ஒரு மகானின் எளிமையான வாழ்க்கை முறையையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆன்மிக நோக்கத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி டிரஸ்ட் சார்பில், வணிக நோக்கம் இல்லாமல் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி பிறந்த பொய்யாமணியில், பெங்களூரு சாய் ஸ்பிரிச்சுவல் சென்டர் மூலம் கட்டப்பட்டுள்ள ஷீரடி சாய் பாபா ஆலயம், பெங்களூரு தியாகராய நகரில் ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி நிறுவிய சாய் ஸ்பிரிச்சுவல் சென்டர் மற்றும் சாய் பாபா ஆலயம், ஷீரடி சாய் பாபா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதன் மூலம் அந்த ஆன்மிகத் தலங்களின் உணர்வை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆழமான வசனங்கள், தெய்வீகப் பாடல்கள், மனதை வருடும் இசை, யதார்த்தமான நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாகியுள்ளது. நவீன ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் கிராபிக்ஸ் ஆகியவையும் சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் பி. நித்தியானந்தம் இப்படத்தை இயக்கியுள்ளார். அருண் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். அபிஷேக் ராஜு இசையமைத்துள்ளார். சுபாஷ் பகவதியப்பன் படத்தொகுப்பு செய்துள்ளார். பி. நந்த குமார் கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார். ஆனந்த மௌலி ஸ்வாமிஜி, ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகா அம்மன் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் ரமணி, தம்பி பார்த்தசாரதி, ரங்கமணி, ஜெயம் மணியன், சங்கர நாராயணன், ஸ்ரீதர், ஸ்ரீவத்சன், சாய் கோகுல்நாத், ரவிசங்கர், மாஸ்டர் தரணிதரன், மாஸ்டர் சாலுவேஷ், வருண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

“குருவின் வாழ்க்கையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய முயற்சி” – முத்தையா முரளிதரன்

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், கிருஷ்ணகுமாரை கடந்த 20 ஆண்டுகளாகத் தெரியும் என்றும், அவரை ஒரு குருவைப் போலப் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தனது குருவின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பயோபிக் திரைப்படத்தை உருவாக்குவது சாதாரணமான விஷயம் அல்ல என்றும், உண்மையான வாழ்க்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ள சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கு நன்றி தெரிவித்தார்.

கிருஷ்ணகுமார் சுமார் இரண்டு ஆண்டுகளாக இப்படத்தை உருவாக்க முயற்சி செய்ததாகக் குறிப்பிட்ட அவர், தனது குருவின் வாழ்க்கை வரலாற்றை உலக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.

“இந்தப் படம் உருவானதே ஒரு மிராகிள்” – கிருஷ்ணகுமார்

ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி டிரஸ்ட் அறங்காவலர் கிருஷ்ணகுமார் பேசுகையில், ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் வாழ்க்கையைப் பற்றிய திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று தெரிவித்தார்.

“இந்தப் படம் உருவானதே ஒரு மிராகிள்தான். ஒவ்வொரு கட்டத்திலும் நடந்த சில சம்பவங்கள்தான் இந்தப் படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. என்னிடம் அளவில்லாத நிதி வசதிகள் எதுவும் கிடையாது. ஆனால் என் குருவின் வாழ்க்கையையும் செய்தியையும் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த எண்ணத்தோடுதான் தியாகராஜன் சாரை அணுகினேன். அவர் ‘நீங்கள் குழப்பம் கொள்ள வேண்டாம், நாம் பண்ணலாம்’ என்று நம்பிக்கை கொடுத்தார்” என்றார்.

மேலும், 21 ஆண்டுகளாக ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியுடன் இருந்ததாகவும், அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தனிப்பட்ட முறையில் பார்த்திருப்பதால், படத்தில் சில காட்சிகளைப் பார்க்கும்போது தனது குருவையே மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

“ஸ்வாமிஜி திரையில் இருப்பது போன்ற உணர்வு” – சிறுத்தை சிவா

இயக்குநர் சிறுத்தை சிவா பேசுகையில், கிருஷ்ணகுமார் தனது குருவைப் பற்றி கொண்டிருக்கும் பக்தியையும், அந்த பக்திக்காக பொய்யாமணியில் கோயில் கட்டியிருப்பதையும் பாராட்டினார்.

சாய்பாபாவை தானும் தனது குருவாக ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறிய அவர், குரு என்பவர் நிழலைப் போலவும், இருளில் வெளிச்சத்தைப் போலவும் இருப்பார் என்றார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி கதாபாத்திரத்தில் நடித்த ஆனந்த மௌலியின் நடிப்பைப் பாராட்டிய சிறுத்தை சிவா, பல இடங்களில் அது நடிப்பு என்றே தெரியாமல் உண்மையிலேயே ஸ்வாமிஜி அங்கே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாகக் கூறினார். குறிப்பாக கிளைமாக்ஸில் இடம்பெறும் பாடல் காட்சி மிகவும் உணர்வுப்பூர்வமாக இருப்பதாகவும், இசையும் காட்சிகளும் இணைந்து பார்வையாளர்களைக் கண்கலங்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“நாங்கள் கருவிகள் மட்டுமே” – இயக்குநர் நித்யானந்தம்

இயக்குநர் நித்யானந்தம் பேசுகையில், இந்தப் படத்தை இயக்கியதாகக் கூறுவதற்குப் பதிலாக, தானும் படக்குழுவினரும் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டதாக உணர்வதாகத் தெரிவித்தார்.

பொய்யாமணியில் படப்பிடிப்புக்குச் சென்றபோது பலத்த மழை பெய்ததாகவும், மறுநாள் முழுவதும் படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழலில், காலையில் மழை முற்றிலும் நின்று படப்பிடிப்பு தடையின்றி நடைபெற்றதாகவும் கூறினார். இப்படம் உருவான ஒவ்வொரு கட்டத்திலும் தங்களுக்குத் தேவையான விஷயங்கள் தடையின்றி கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஷீரடி சாய்பாபாவின் அருளும், பொய்யாமணியில் நிலவும் தெய்வீக அதிர்வுகளும் இப்படம் உருவாக முக்கியக் காரணமாக இருந்ததாகவும் நித்யானந்தம் தெரிவித்தார்.

“இசையும் பாடல்களும் படத்தின் ஆன்மிக உணர்வை வலுப்படுத்துகின்றன” – வீரமணி ராஜு

பின்னணிப் பாடகர் வீரமணி ராஜு பேசுகையில், தனது மகன் அபிஷேக் ராஜு இசையமைக்கும் படத்தில் தான் பாடியிருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் என்றார்.

சாய்பாபாவின் ஆரத்திப் பாடல்களை இப்படத்துக்காக தமிழில் பாடும் வாய்ப்பு கிடைத்ததைப் பாபாவின் ஆசீர்வாதமாகக் கருதுவதாகக் கூறிய அவர், பொய்யாமணி கோயிலின் பெயரைப் பாடலின் பல்லவியில் இடம்பெறச் செய்திருப்பது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

“குருவின் வாழ்க்கை முக்கியமானது” – செந்தில் தியாகராஜன்

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் பேசுகையில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் குரு என்பவர் வழிகாட்டியாகவும், பல்வேறு கட்டங்களில் துணையாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் வாழ்க்கை மற்றும் அவரது ஆன்மிகப் பணிகளைப் பற்றி அறிந்தபோது, இந்தக் கதையைத் திரைப்படமாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும், கிருஷ்ணகுமாரின் அர்ப்பணிப்பும் குருவின் மீதான பக்தியும் தன்னை ஈர்த்ததாகவும் தெரிவித்தார்.

“மனிதநேயத்தை முன்னிறுத்தும் காட்சிகள்”

ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி தாமரைக்கண்ணன், படத்தில் தன்னை மிகவும் பாதித்த மூன்று காட்சிகளைப் பற்றி குறிப்பிட்டார். யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம் என்று ஸ்வாமிஜி கூறும் காட்சி, ஒரு விதவைப் பெண் பாதபூஜை செய்ய அனுமதி கேட்கும்போது, அவர் அந்தப் பெண்ணைத் தாயாகக் கருதும் காட்சி உள்ளிட்டவை ஆழமான மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.

யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் சுபாஷ் பேசுகையில், ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற கருத்தின் ஆழத்தை இப்படம் உணர்த்துவதாகவும், குரு – சீடன் உறவை அழகாகப் பதிவு செய்திருப்பதாகவும் பாராட்டினார். குறிப்பாக விதவைப் பெண்ணுடன் ஸ்வாமிஜி பேசும் காட்சி, சமூகக் கட்டுப்பாடுகளைக் கடந்து மனிதநேயத்தை முன்னிறுத்தும் காட்சியாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வசனகர்த்தா யார் கண்ணன் பேசுகையில், வாழ்க்கையில் ஏற்படும் எதிர்மறையான விஷயங்களையும் நேர்மறையாக மாற்றுவதுதான் ஆன்மிகம் என்று குறிப்பிட்டார். படத்தின் கிளைமாக்ஸில் வசனங்களுக்குப் பதிலாக பாடல் வழியாக உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் மக்கள் குரல் ராம்ஜி, இப்படம் நம்பிக்கை மற்றும் பொறுமை ஆகிய சாய்பாபாவின் போதனைகளை உணர்த்துவதாகக் கூறியதுடன், குருவின் குருவாகக் குறிப்பிடப்படும் கதாபாத்திரத்திற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வழங்கியிருக்கலாம் என்ற தனது கருத்தையும் பதிவு செய்தார்.

இவ்வாறு, ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் வாழ்க்கை, ஆன்மிகப் பயணம், குரு பக்தி மற்றும் மனிதநேயச் சேவையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சாய் பாதானந்தா’, ஒரு ஆன்மிக வாழ்க்கை வரலாற்றைத் திரை வடிவில் பதிவு செய்யும் முயற்சியாக உருவாகியுள்ளது. பத்திரிகையாளர்களுக்காக நடைபெற்ற சிறப்புக் காட்சியைத் தொடர்ந்து, படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரைகளிலும் ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.