அல்லு அர்ஜுனின் புதிய அலுவலகம் ‘ICONZA’ – தாத்தாவின் பிறந்தநாளில் திறப்பு!

7

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான தனது தாத்தா அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ICONZA’ என்ற தனது புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளார்.

அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த அலுவலகத் தொடக்க விழா எளிமையான முறையில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் அல்லு அர்ஜுனின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். விழா தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அல்லு அர்ஜுன், தனது தாத்தாவின் அழியாத கலைப் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிப்பாக இந்த புதிய அலுவலகம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்படும் அல்லு ராமலிங்கய்யா, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளில் தனது புதிய அலுவலகத்தைத் திறந்திருக்கும் அல்லு அர்ஜுன், தனது குடும்பத்தின் திரைப்பாரம்பரியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் தனது கலைப் பயணத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார்.

கிரியேட்டிவிட்டி, இணைந்து செயல்படுதல் மற்றும் புதிய யோசனைகளுக்கான தளமாக ‘ICONZA’ உருவாக்கப்பட்டுள்ளது. நடிப்பைத் தாண்டி அல்லு அர்ஜுனின் விரிவடைந்து வரும் கலை மற்றும் படைப்புப் பயணத்தில் இந்த அலுவலகம் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

இதனிடையே, அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் அட்லி இயக்கும் ‘ராக்கா’ திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்த திரைப்படம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘AA23’ திரைப்படத்திலும், அதன் பின்னர் ‘புஷ்பா 3: தி ரேம்பேஜ்’ திரைப்படத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார்.

தனது தாத்தாவின் பிறந்தநாளில் ‘ICONZA’வைத் தொடங்கியிருப்பதன் மூலம், குடும்பத்தின் கலைப் பாரம்பரியத்தை நினைவுகூர்வதோடு, தனது அடுத்தகட்ட படைப்புப் பயணத்திற்கும் அல்லு அர்ஜுன் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.