‘டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது – நடிகை ஜீவா சுப்பிரமணியம் நெகிழ்ச்சி!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படம், திருநங்கை நடிகை ஜீவா சுப்பிரமணியத்துக்கு அவர் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. பல திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்துள்ள ஜீவா, ‘டோரதி’ படத்தில் தனது நடிப்புக்குக் கிடைத்து வரும் பாராட்டுகளால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
ஒரு கலைஞரின் திறமை அங்கீகரிக்கப்பட்டு, அவரது பணி மக்களால் கொண்டாடப்படும்போதுதான் உண்மையான மனநிறைவு கிடைக்கிறது. அந்த வகையில், ‘டோரதி’ திரைப்படம் தனது நடிப்புப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளதாக ஜீவா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தனது கதாபாத்திரத்துக்குக் கிடைக்கும் வரவேற்பு மட்டுமல்லாமல், ரசிகர்களும் திரையுலகினரும் தன்னை அன்புடன் பாராட்டுவது நீண்ட காலமாகத் தான் எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜீவா சுப்பிரமணியம் கூறுகையில், “எனது நடிப்பை அங்கீகரித்து மக்கள் கொண்டாடுவதை முதல்முறையாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளாக இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தேன். என் தம்பி கார்த்திக் சுப்புராஜ் மூலமாக அது இப்போது நடந்திருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநருக்கும், ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.
கார்த்திக் சுப்புராஜ், ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் மேடம் ஆகியோர் எங்கு சென்றாலும் என்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். என்னை ‘ஜீவா அக்கா’ என்று அன்போடு அழைக்கிறார்கள். அந்த அன்பும் ரசிகர்களின் ஆதரவும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மகிழ்ச்சி, இன்னும் பத்து ஆண்டுகள் நான் தொடர்ந்து பயணிப்பதற்கான எனர்ஜியைக் கொடுத்துள்ளது” என்றார்.
இதுவரை சுமார் 45 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் ஜீவா சுப்பிரமணியம் நடித்துள்ளார். ‘ஆக்கம்’, ‘தாரை தப்பட்டை’, ‘தர்மதுரை’, ‘தர்பார்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘சுழல்’, ‘கையும் களவும்’ உள்ளிட்ட இணையத் தொடர்களிலும் அவர் நடித்திருக்கிறார். தற்போது ‘டோரதி’ திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹைதராபாத், பெங்களூரு, கேரளா மற்றும் இந்தித் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள் எனப் பலரும் ஜீவாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுகள் தனது மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
‘டோரதி’ திரைப்படம் மூலம் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தொடர்ந்து முயற்சி செய்து திரைத்துறையில் முன்னேற வேண்டும் என்ற உறுதியையும் புதிய உத்வேகத்தையும் அளித்துள்ளதாக ஜீவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனும் அவர் காத்திருக்கிறார்.
தனக்கு வாய்ப்பளித்து ஆதரவளித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கும், அவரது இயக்கக் குழுவைச் சேர்ந்த விக்கி, கீர்த்தி, ஸ்ரீனிவாசன், பரத் ஆகியோருக்கும் ஜீவா சுப்பிரமணியம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தான் மதிக்கும் நபர்களிடமிருந்து கிடைத்த அன்பும் அங்கீகாரமும் தனது வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தை மிகவும் பொக்கிஷமானதாக மாற்றியுள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

