மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சூரி – ரவிக்குமார் கூட்டணி… சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்கத் தொடங்கிய ‘சூரி 7’!
நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் அக்டோபர் 14-ஆம் தேதி பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் வழங்கும் இப்படத்தை, ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார். படப்பிடிப்பைத் தொடங்கும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, ‘மண்டாடி’ படத்தின் தயாரிப்பாளர் ஆர். எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி வைத்தார்.
வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூரி, ‘விடுதலை பாகம் 1’, ‘விடுதலை பாகம் 2’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கதாநாயகனாகத் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அவரது சமீபத்திய வெளியீடான ‘மண்டாடி’ திரைப்படமும் வசூல் ரீதியாக அவரது திரைப்பயணத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், அவர் கதாநாயகனாக நடிக்கும் ஏழாவது திரைப்படமாக உருவாகும் இப்படம், தற்போது ‘சூரி 7’ என்ற தற்காலிகப் பெயரில் தயாராகிறது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு தொடக்க விழாவில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் மதிமாறன், லைகா புரொடக்ஷன்ஸ் தமிழ்க்குமரன், இயக்குநர் கீர்த்தீஸ்வரன், பாந்தம் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிஜாய் அற்புதராஜ், இயக்குநர்கள் ஏ.ஆர்.கே. சரவணன், நலன் குமாரசாமி, மித்ரன், வெற்றிமாறன், ராம்குமார் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் நான்காவது தமிழ்த் திரைப்படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. பிளாக்பஸ்டர் திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற இந்நிறுவனம், தமிழிலும் தனது தயாரிப்புப் பயணத்தை விரிவுபடுத்தி வருகிறது. ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’, ‘மொத ராத்திரி’, ‘இருமுடி’ உள்ளிட்ட படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு, தமிழில் மேலும் பல திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளதாகத் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி தெரிவித்துள்ளார்.
‘ரணபலி’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய பணிகளில் பிஸியாக இருந்தபோதிலும், சூரியின் புதிய படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக நவீன் யெர்னேனி சென்னைக்கு வந்திருந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “தமிழில் நாங்கள் தயாரித்த ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’, ‘மொத ராத்திரி’, ‘இருமுடி’ ஆகிய படங்களுக்குக் கிடைத்த வெற்றியும் வரவேற்பும், இந்த மொழியில் மேலும் பல படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரித்தது. தற்போது சூரி நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கிறோம். இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கும் சூரிக்கும் இடையே இருந்த நட்பையும் அன்பையும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்வில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் அனைத்து திரையுலகப் பிரபலங்களுக்கும் நன்றி” என்றார்.
இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், “மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கதாநாயகனாக சூரி தனக்கெனத் தனியிடம் பிடித்திருக்கிறார். அவரது திறமைக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் நியாயம் செய்யும் வகையில் அவரைத் திரையில் காட்ட வேண்டிய கூடுதல் பொறுப்பு எனக்கு இருக்கிறது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி. மிகுந்த உற்சாகத்துடன் இந்தப் படத்தைத் தொடங்குகிறோம். ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் பிடிக்கும்” என்றார்.
‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களின் மூலம் புதுமையான கதைக்களங்களை நகைச்சுவையுடன் இணைத்துப் பார்வையாளர்களைக் கவர்ந்த ரவிக்குமார், தற்போது சூரியுடன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார்.
சூரியின் கதாநாயகன் பயணத்தில் மற்றொரு முக்கியமான படமாக உருவாகும் ‘சூரி 7’ திரைப்படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


