சூர்யாவின் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் அறிமுகமான மித்துன் மாணிக்கம் இயக்கும் ‘ஃபேமிலி பாய்’… டீசர் வெளியீடு!

9

நடிகர் சூர்யா தயாரிப்பில் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமான நடிகரும் இயக்குநருமான மித்துன் மாணிக்கம், தற்போது இயக்கி, கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாகியுள்ள இப்படம், குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ளது.

மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் இப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மெக்கானிக் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மித்துன் மாணிக்கம் தயாரித்துள்ள இப்படத்தை, மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் எல்.எல்.பி. நிறுவனத்தின் சார்பில் முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தைத் தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிர்மல் ஜே.பி. இசையமைத்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை ஜிஜேந்திரன் வி. மேற்கொள்ள, கலை இயக்கத்தை சி.கே. முஜிபுர் ரஹ்மான் கவனித்துள்ளார்.

ஒரு பொருளைத் தேடும் பயணம்… எதிர்பாராத திருப்பங்கள்!

‘சிலப்பதிகாரத்தில தொடங்கி சிங்கார சென்னை வரைக்கும், ஒரு பொருள் தொலையும் போது… அத தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்’ என்ற வசனத்துடன் தொடங்கும் இப்படத்தின் டீசர், 2020-ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருப்பதை வெளிப்படுத்துகிறது.

காணாமல் போன ஒரு பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒருநாள் பயணத்தில் நிகழும் சுவாரசியமான சம்பவங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் கதையின் பின்னணியில் உள்ள மர்மம் ஆகியவற்றை டீசர் சுவாரசியமாக அறிமுகப்படுத்துகிறது. இதன் பின்னணி இசையும் காட்சியமைப்பும் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. குடும்ப உணர்வுகளுடன் த்ரில்லர் அம்சங்களும் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

‘ஃபேமிலி பாய்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசர் வெளியீட்டைத் தொடர்ந்து, இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.