நடிகர் வைபவ் கதாநாயகனாக நடிக்கும் ஆன்மீகமும் ஆக்ஷனும் கலந்த புதிய திரைப்படமான ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார். தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியுள்ளார்.
முன்னதாக ‘தத் த்வம் அஸி’ என்ற பெயரில் உருவாகி வந்த இப்படத்திற்கு தற்போது ‘மணிகண்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நீல நிற ஆடையுடன் கையில் வேல் ஏந்திய கம்பீரமான தோற்றத்தில் வைபவ் இடம்பெற்றுள்ளார். அவருக்குப் பின்னால் பிரம்மாண்டமான ஐயப்பன் சிலையும், தங்க நிற ஒளியும் நெருப்புச் சுடர்களும் நிறைந்த காட்சியமைப்பும் இடம்பெற்றுள்ளன. ‘இறைவன் மற்றும் அவரது மக்களின் பயணம்’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் ஆன்மீகப் பின்னணியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
ஐயப்ப பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தை மையமாகக் கொண்ட கதை!
மாலை அணிந்து விரதமிருந்து, கடினமான பாதைகளைக் கடந்து ஐயப்பனைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தை மையமாகக் கொண்டு ‘மணிகண்டா’ திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. பக்தி, இறைநம்பிக்கை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களுடன் அதிரடியான சண்டைக் காட்சிகளும் இணைந்த திரைப்படமாக இது உருவாகியுள்ளது. ஆன்மீகப் பின்னணியில் குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
தந்த்ரா ஃபிலிம்ஸ் சார்பில் ஜே.கே. சரவணா மற்றும் எம். ராஜாராம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். மலையாளத்தில் கவனம் பெற்ற ‘மாளிகப்புரம்’ திரைப்படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர், இப்படத்தை இயக்கியுள்ளார். வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியுள்ளார்.
வைபவ் – மீனாட்சி கோவிந்தராஜன் கூட்டணி!
இப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளராக பிரேம் ஜி அமரன் பணியாற்றியுள்ளார். யுவன் செல்வா ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார். படத்தொகுப்பை பிரவீன் கே.எல் மேற்கொண்டுள்ளார். சூர்யா ராஜீவன் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ஸ்டண்ட் சில்வா மற்றும் சக்தி சரவணன் இணைந்து சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன், ஜே.கே. சரவணா மற்றும் ப்ருத்வி ஆதித்யா ஆகியோர் எழுத்துப் பணிகளில் இணைந்துள்ளனர்.
கார்த்திகை மாதத்தில் வெளியாகுமா ‘மணிகண்டா’?
‘மணிகண்டா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐயப்ப பக்தர்களுக்கு உகந்த கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, 2026-ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தின் டீசர், இசை வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்வுகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்த கட்டங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீகப் பின்னணியையும் ஆக்ஷன் அம்சங்களையும் இணைத்து உருவாகியுள்ள ‘மணிகண்டா’, வைபவின் திரைப்பயணத்தில் வித்தியாசமான படைப்பாக அமையுமா என்ற எதிர்பார்ப்பை அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது.
