புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் – சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்!

7

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியை இயக்குநரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.

லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த், நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பாட்டிக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக முடி உதிர்வு ஏற்பட்டதை நேரில் பார்த்துள்ளதாகத் தெரிவித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முடி இழப்பின் காரணமாக எதிர்கொள்ளும் சிரமங்களைத் தன்னால் உணர முடிவதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு உதவும் வகையில் முடிதானம் செய்வது மிகவும் வரவேற்கத்தக்க செயல் என்றும் பாராட்டினார்.

மேலும், சமூக வலைதளங்களை நல்ல செயல்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த், இதுபோன்ற சமூக நலன் சார்ந்த நிகழ்வுகளை அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இத்தகைய நல்ல முயற்சிகளுக்கு தன்னால் முடிந்த ஆதரவையும் தொடர்ந்து வழங்குவேன் என்றும் அவர் தெரிவித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் இந்த முயற்சி, சமூக அக்கறையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.